search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
    X

    பெண் பக்தர் ஒருவர் அலகு குத்தி தீ மிதித்த காட்சி.

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்று விழா, பொங்கல் வைத்தல் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மேலும் நாள்தோறும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் சார்பில் வாணவேடிக்கை மேளதாளத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

    முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் வேப்பிலையை கையில் ஏந்தியும் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடனும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்தனர்.

    தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக கோவிலில் இருந்து பழைய கோர்ட்டு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாலையில் அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் சாமி நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கை, நையாண்டி மேள தாளத்துடன் சப்தா பரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    12-ந் தேதி வசந்த உற்சவம், 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடையாற்றி கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×