என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தூக்குபோட்டு மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக் குட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (40). மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது அருந்தியதால் அவரை மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. பிறகு கடைக்கு பொருள்கள் வாங்க ஞானசேகரன் மனைவி நாகலெட்சுமி சென்று விட்டார். பின்பு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஞானசேகரன் தூக்கில் தொங்கினார்.

    அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நாகலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    நாகை அருகே பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே தாழத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூவரசன் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அப்போது அதே பகுதியில் தனியார் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் அவருக்கு அறிமுகம் ஆனார். அந்த மாணவியை பூவரசன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் தனது காதலை மாணவியிடம் கூறியுள்ளார். அதனை அவர் மறுத்து பூவரசனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நேற்று தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை பூவரசன் கடத்தி சென்று அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து நாகப்பட்டினம் மகளிர் போலீசில் பூவரசன் மீது புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபா வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

    நாகையில் 10-ம் வகுப்பு மாணவியை கல்லூரி மாணவர் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை அருகே விபத்தில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் போக்கு வரத்து காவல்துறை தலைமை காவலராக பணி புரிந்து வந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் மயிலாடுதுறை நீதிமன்றம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருநாவுக்கரசு நேற்று இரவு பணிமுடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் கச்சேரி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதி படுகாய மடைந்தார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குபதிவு செய்து திருநாவுக்கரசு அடையாள தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் முதலியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (40) சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    வேதாரண்யம் - திருத்துறைப் பூண்டி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சந்திர மவுலி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் காயம் அடைந்தனர். வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகை அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வலிவலம் போலீஸ் சரகம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பிரசாத்(வயது 14). இவன் திருக்குவளை அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் இவன் நேற்று மதியுள்ளான் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது. உடனே அவனை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழியில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். கோவில் பத்து என்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார்.

    சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் முரளி என்கிற மாட்டு முரளி (31) பரங்கிப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரித்த போது நேற்று சீர்காழி பைபாஸ் சாலையில் பழமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மயிலாடுதுறையை சேர்ந்த பாலமுருகனிடம் 2 விலையுயர்ந்த செல்போனை திருடியதை ஒத்துக் கொண்டார்.

    மேலும் சீர்காழி ராஜேந்திரா நகரை சேர்ந்த சாகுல் அமீது வீட்டில் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து முரளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    காரைக்கால், நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த அஞ்சான் மகன் அரவிந்த் (20), காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் கடந்த 16-ந்தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தோட்டாக்கள் பாய்ந்து காயமடைந்த மீனவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மீனவர் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சி செய்ததாக ஒரு படகில் நீல வண்ண சீருடையில் வந்த சுமார் 20 இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (55). இவர் மருந்து மாத்திரைகள் வாங்க அண்டர்காடு மெயின்ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மயிலாடுதுறை அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாய கூலிதொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அந்த பகுதியில் நிலத்தை குத்தகைக்கு பெற்று சாகுபடி செய்து வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜேந்திரன், வயலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது ராஜேந்திரன், எதிர்பாராத விதமாக வயலில் எலிக்கு வைத்து இருந்த மின்கம்பியை மிதித்ததாக தெரிகிறது.

    இதில் மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மகன் மருதவாணன் (25) மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே கடையில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்த மறைஞாயநல்லூர் உச்சக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). முன்னாள் ராணுவ வீரர். இவர் பூப்பெட்டி என்ற இடத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு இவரது கடையில் அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடை வாசலில் பாட்டில்களை உடைத்தும், தரக்குறைவாக பேசியும், கடை ஊழியரையும் தாக்கினார்களாம். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தம்பிரான் குடிகாடை சேர்ந்த வினோத் (22), ராஜசேகர் (28), மகேஷ் (31), சர்வகட்டளைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) ஆகிய நால்வரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

    பொறையாறில் போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி சென்றதால் சப்-இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருளப்பன் மகன் லூர்துராஜ். தொழிலாளி. இவர் அப்பகுதியில் நடைபெறும் ஆற்றுப்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பாலம் வழியாக மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் பாலம் கட்டப்பட்டதால் மாற்றுப் பாதை வழியாக மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளின் கையை பிடித்து லூர்துராஜ் மறுகரைக்கு செல்ல வைத்துள்ளார்.

    இதனை கண்ட அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பாலமுருகன் என்பவர் மாணவிகளின் கையை பிடித்துவிடும் லூர்துராஜ் செயலை தட்டிக்கேட்டு தகராறு செய்தார். மேலும் அவர் இதுபற்றி பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜை கைது செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த லூர்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே போலீஸ் நிலையம் வந்த பாலூர் கிராம மக்கள் அங்கு லூர்துராஜ் இல்லாததால் போலீசார் மீது சந்தேகம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே லூர்துராஜ் காட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு மீண்டும் போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் லூர்துராஜ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை அடித்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால், கலியமூர்த்தி, எழுத்தர் ரவி ஆகியோரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர், குமிழங்காட்டை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் மூவேந்தர் முன்னேற்றக்கழக நாகை வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மணி மோட்டார் சைக்கிளில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து புத்தூருக்கு சென்றார். அவர் பனமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த அனுமந்தபுரத்தை சேர்ந்த தாமோதரன் (40) என்பவரும், மணியும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மணி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். தாமோதரன் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மூவேந்தர் முன்னேற்றக்கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மணி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மணிசாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஓட்டலில் பொருத்தப்பட்ட காமிரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என்று கூறினார். இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×