என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே விபத்து: மூவேந்தர் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர், குமிழங்காட்டை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் மூவேந்தர் முன்னேற்றக்கழக நாகை வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மணி மோட்டார் சைக்கிளில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து புத்தூருக்கு சென்றார். அவர் பனமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த அனுமந்தபுரத்தை சேர்ந்த தாமோதரன் (40) என்பவரும், மணியும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மணி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். தாமோதரன் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மூவேந்தர் முன்னேற்றக்கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மணி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மணிசாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஓட்டலில் பொருத்தப்பட்ட காமிரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என்று கூறினார். இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






