என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கி இங்கு வந்து மீன்களை பிடித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு மீன்களை கொள்ளை அடித்துச் சென்றனர். இதனால் சீசன் முடியும் முன்பே மீனவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கோடியக்கரையில் உள்ள உள்ளுர் மீனவர்களும் தங்கியிருந்த ஒருசில மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களது வலையில் ஆழ்கடலில் கிடைக்கும் கோலா, நீலக்கால் நண்டு, பர்லா, மற்றும் கடல் கொய், மரசூடை, சுறா, பன்னா, பூவாளி, காலா, வாவல், இறால் போன்ற மீன்கள் சிக்கின. குறைந்த அளவே சென்ற படகுகளில் 2 டன் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோலா மீன் கிலோ ரூ.150-க்கும், நீலக்கால் நண்டு கிலோ ரூ.300-க்கும், பர்லா கிலோ ரூ.150-க்கும், மரக்கூடை ரூ.50-க்கும், சுறா ரூ.250-க்கும், பன்னா ரூ.250-க்கும், பூவாளி ரூ.150-க்கும், காலா ரூ.300-க்கும், வாவல் ரூ.400-க்கும், பெரிய இறால் ரூ.500-க்கும் விலை போனது. மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் இன்று முழுவீச்சில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 55) இவர் லாரியில் லோடு ஏற்றும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கருப்பம்புலம் மெயின் ரோடு கைகாட்டி அருகே லாரியில் சவுக்குமரத்தை லோடு ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையை கடக்க முயன்ற போது பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் பஸ் காசிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காசிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யத்தில் இருந்து இன்று காலை ஆறுகாட்டுத்துறைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேலியில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மயிலாடுதுறை ஒத்தசரகு தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் மகன் விமல் (வயது 21) கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை சென்ற மயிலாடுதுறை போலீசார் விமலையும், சிறுமியையும் மயிலாடுதுறை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் நாகை மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமியை கர்ப்பமாக்கிய விமலை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள சம்பாதோட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (56). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், ரங்கையன் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
அவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து 8 நாட்டின் கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் படகு நிலை குலைந்தது.
இதனால் படகில் இருந்த மாரியப்பன்,ரங்கையன் ஆகிய இருவரும் தடுமாறி கடலில் விழுந்தனர்.
அப்போது வேறு படகில் வந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்டு படகில் ஏற்றினர். ஆனால் மாரியப்பன் இறந்து விட்டார். காயம் அடைந்த ரங்கையன் கரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கூறைநாடு அண்ணாவீதியில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் பாலமுருகன், குணசேகரன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல்அறிந்த வீ.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
அவருடன் அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், நகர துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக், வார்டு செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வநாயகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் ஆகியோரும் சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 65). இவர் செம்போடை வடக்கு கடைத்தெரு பகுதியில் புஷ்பவனம் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரையை மர்ம நபர்கள் பிரித்து உள்ளே இறங்கி ரூ. 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து முருகையன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தரங்கம்பாடி:
சீர்காழி மதுவிலக்கு போலீசார் நந்தலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில் வந்த காரைக்கால் திருநகரியை சேர்ந்த சூரணா (30) மற்றும் 14 வயது இளம் பெண் ஆகியோர் 160 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க கூடாது, சி.ஆர்.சி பதவி உயர்வை காலதாமதப் படுத்தாமல் உடன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் மயிலாடுதுறை ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோட்ட தலைவர் மணிவண்ணன், பொறுப்பாளர்கள் செல்வம், ரகு, வீரமணி, சாகுல்ஹமீது, பிரகாஷ் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
முடிவில் திருவாரூர் கிளை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ (வயது21) என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நாகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும், ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாகை தலைமை தபால் நிலையம் முன் கடந்த 13-ந் தேதி மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணி பல்வேறு வீதிகள் வழியாக சென்று உண்ணாவிரதம் நடைபெற்ற தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.
நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், விஜயபாலன், ரங்கநாதன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நாகை வந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இலங்கையிடம் உள்ள விசைப்படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என உறுதி அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
அதில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறுதி மொழியை ஏற்று மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை மட்டும் வாபஸ் பெறுவதாக வும், உண்ணாவிரதம் வழக்கம் போல் தொடரும் எனஅறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 9-நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அதனை கைவிட்டனர். இன்று காலை சிறிய படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக் குட்பட்ட சர்வகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சநதிக்குளத்தைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஸ்வினி என்ற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது.
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று தனது தாயார் வீட்டில் இருந்து வந்தார். இதில் குழந்தை அஸ்வினி தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்துமதி மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த இந்துமதியை முருகேசன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு தாயார் வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார்.
இந்துமதிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்ட அவர் வீட்டில் விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டாராம். அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து இந்துமதியின் தாயார் முத்துலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தனி விசாரணை மேற்கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட சிறைமீட்டான்காடு பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை என்பவர் இறந்ததையொட்டி நேற்று மதியம் இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது வெடி வெடித்ததில் பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்றழைக்கப்படும் விஷ வண்டுகள் வெளியேறி கூட்டத்தினரை கடித்தது.
இதில் வேதையன், தொழிலாளி அன்பழகன், கார்த்தி, மூர்த்தி, மனோகரன், பாஸ்கரன் உட்பட பலரை கடித்தது. இதில் ஆறு பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வந்தனர்.
அப்போது அமைச்சர்களை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். படகுகளை பறிகொடுத்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. விசைப்படகுகளை மீட்கும் வரை நாங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினர்.
தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ஆட்சி காலத்தில் 343 விசைப்படகுகளை மீட்டு தந்தார்.18 விசைப்படகுகள் விடுவிக்க முடியாத அளவிற்கு முழு சேதம் அடைந்து விட்டது.
எனவே பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் இன்னும் 2 நாட்களுக்குள் வழங்கி விடுகிறோம்.
இலங்கை வசம் உள்ள 138 விசைப்படகுகளை மீட்க மத்திய அரசுக்கு முழு அழுத்தம் கொடுத்து மீட்பது தமிழக அரசின் கடமை. விசைப்படகுகளை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நாகை மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது. இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மீனவர்களின் போராட்டத்துக்கு இளைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.






