என் மலர்
செய்திகள்

கோடியக்கரையில் 2 டன் அளவில் சிக்கிய ஆழ்கடல் மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கி இங்கு வந்து மீன்களை பிடித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு மீன்களை கொள்ளை அடித்துச் சென்றனர். இதனால் சீசன் முடியும் முன்பே மீனவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கோடியக்கரையில் உள்ள உள்ளுர் மீனவர்களும் தங்கியிருந்த ஒருசில மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களது வலையில் ஆழ்கடலில் கிடைக்கும் கோலா, நீலக்கால் நண்டு, பர்லா, மற்றும் கடல் கொய், மரசூடை, சுறா, பன்னா, பூவாளி, காலா, வாவல், இறால் போன்ற மீன்கள் சிக்கின. குறைந்த அளவே சென்ற படகுகளில் 2 டன் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோலா மீன் கிலோ ரூ.150-க்கும், நீலக்கால் நண்டு கிலோ ரூ.300-க்கும், பர்லா கிலோ ரூ.150-க்கும், மரக்கூடை ரூ.50-க்கும், சுறா ரூ.250-க்கும், பன்னா ரூ.250-க்கும், பூவாளி ரூ.150-க்கும், காலா ரூ.300-க்கும், வாவல் ரூ.400-க்கும், பெரிய இறால் ரூ.500-க்கும் விலை போனது. மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் இன்று முழுவீச்சில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.






