என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே உள்ள கீழையூரில் அரசு உதவி பெறும் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மணிகண்டன் (42) பணியாற்றி வருகிறார்.
இவர் தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் முத்தழகன், தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் பெற்றோர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
சீர்காழி:
சீர்காழி பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி ஜந்தர்மந்தரில் கடந்த 14 நாட்களாக தமிழக டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீர்காழி சட்டமன்ற தொகுதி தலைவர் குமார் தலைமையில் பழைய பேருந்துநிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சீர்காழி டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூரை சேர்ந்தவர் ராஜேஷ்.இவருக்கும் தரங்கம்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜேசின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பார்த்து கொள்ள பதுப்பெண்ணை ராஜேஷ் அழைத்துள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் புதுப்பெண் தங்கையை அனுப்பி வைத்துள்ளனர்.
அவரை ராஜேஷ் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அப்பெண் மயிலாடுதுறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து புதுமாப்பிள்ளை ராஜேசை தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் வீட்டிற்கு செங்கல் வாங்க சென்றார். அப்போது அவரை பெயர் சொல்லி அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அவரது தம்பி குமரன் ஆகியோர் ஸ்குரு டிரைவரால் ரமேசை தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. (பொறுப்பு) புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சீனுவாசபுரம் வள்ளியம்மை நகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். கவரிங் நகை கடை வைத்துள்ளார்.இவருக்கும் மதுக்கூரை சேர்ந்த ஜெய சூர்யாவிற்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
ஜெயசூர்யா மயிலாடு துறை ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 23-ந் தேதி அலுவலகத்தில் எலி மருந்து தின்று விட்டார்.
பின்னர் தனது பெற்றோரை பார்க்க திருவாரூருக்கு பஸ்சில் சென்றார். அப்போது தனது தந்தையிடம் எலி மருந்து தின்று விட்டதாக கூறி உள்ளார்.உடனே அவரது பெற்றோர் திருவாரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ஜெயசூர்யா மயக்கமடைந்தார். அவரை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 4½ வருடத்தில் ஜெயசூர்யா இறந்ததால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஜெயசூர்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வரதட்சணை கொடுமையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
தலைநகர் புதுடெல்லியில் கடந்த 13 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூம்புகார் கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தியதோடு அங்குள்ள கண்ணகி சிலையிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுப்படி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும், அனைத்து நதிகளை நீர்வழி பயணத்திட்டத்தின் மூலம் இணைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 14-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போரட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் இலங்கை அரசை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்ககோரியும் பூம்புகார் கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையிடம் மனு கொடுத்தும், கடலில் இறங்கியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாய சங்கத்தலைவர் வடக்குதோப்புதுரை தலைமை தாங்கினார்.
இதில் நாகை வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், விவசாய சங்க மாநில பொறுப்பாளருமான பூம்புகார் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் கண்ணகி சிலையிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் அன்பு,முன்னோடி விவசாயிகள் நெடுஞ்செழியன், மோகன்குமார், ஆறுமுகம், வரதராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தை ரத்து செய்த ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் லைக்கா நிறுவன நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காக இலங்கை செல்லக் கூடாது என்று ரஜினிகாந்தை வற்புறுத்தியதாக கூறுவது கண்டனத்திற்குரியது.
சிவகங்கை மாவட்ட அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் இடமாற்றத்தை ரத்து செய்து மீண்டும் அவரை பணியமர்த்த வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களை மத்திய மந்திரி இருக்கையில் அமர வைக்காமல் நிற்க வைத்து பேசினார். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் முடிகண்ட நல்லூர் உடையார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 65). இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது பத்மாவதி தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். திடிரென அவர்கள் பத்மாவதியை தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.
இது குறித்து செம்பனார் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இந்த பகுதியை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் விசாரணையில் தெரியவருகிறது.
அதிகாலையிலேயே பெண்னை தாக்கி திருட்டு சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நாகை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் முருகையன், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமஜெயம் வரவேற்றார்.
கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
34-வது வணிகர் தினவிழா மாநில மாநாடு சென்னை தீவு திடலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது. அதில் நாகை மாவட்டத்தில் இருந்து திரளான வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் நமது பாரம்பரிய வணிகத்தோடு தொடர்புடையது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது பாரம்பரிய வணிகம் பாதிக்கப்படுகிறது. எனவே வெளிநாட்டு பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது.
ஆன்லைன் வணிகத்தால் சில்லறை வணிகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில்லறை வணிகம், விவசாயம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட கச்சதீவை மீட்க வேண்டும். கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்லையில் மிதவைகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தேவராஜ், மாநில பொருளாளர் ரத்தினம், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பால்சாமி நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் சின்னதேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (வயது86).
இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வேதாரண்யம்-நாகை சாலையில் காவலர் குடியிருப்புக்கு எதிரே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் தேரடி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). விவசாயி. மகன்கள் வெளியூரில் இருப்பதால் மனைவியுடன் இங்கு வசித்து வருகிறார்.
நேற்று இரவு காற்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு திடுக்கிட்டனர். இதையடுத்து அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகைகள், ரூ.32 ஆயிரம் ரொக்கம் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராமலிங்கம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதல் மனைவி கலைச்செல்வி கணவர் மற்றும் அவருடைய 2-வது மனைவி மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 32), இவர்களுக்கு லாவண்யா (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்து விட்டனர்.
இதனால் முருகேசன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தந்தையுடன் வசித்து வந்த லாவண்யா, தருமபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற இருந்ததால் விடியற்காலை லாவண்யாவை தேர்வுக்கு படிப்பதற்கு அவருடைய தந்தை எழுப்ப சென்றார்.
அப்போது லாவண்யா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாதிரிமங்கலத்தில் இருக்கும் லாவண்யாவின் தாய் கலைசெல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து விரைந்து வந்து கலைச்செல்வி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து கலைச்செல்வி, மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், எனது கணவரும், அவரின் 2-வது மனைவியும் சேர்ந்து எனது மகளுக்கு கொடுத்த மனஉளைச்சலால் அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாள். எனவே போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






