என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே காய்ச்சலுக்கு சிறுவன் பலி- மருத்துவ குழுவினர் வீடு வீடாக ஆய்வு
- மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
- கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் கவின் என்கிற தேவகுமார் (7) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதை தொடர்ந்து தேவகுமாரின் சகோதரி, எழில்இனியாவுக்கும் (2) காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் காசிநாதபுரம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குனர் ஜவகர்லால், திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காசிநாதபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






