search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை- நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

    • நெல்லை மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
    • பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர்.

    நெல்லை:

    தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.

    மேலப்பாளையம்

    மாவட்டத்தில் திசையன்விளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், களக்காடு, ஏர்வாடி, பத்தமடை, பேட்டை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி திடல்களிலும் நடந்த தொழுகையில் சிறுவர்-சிறுமியர்கள் உள்பட குடும்பத்தினருடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

    நெல்லை மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதினா பள்ளி திடலில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்து செய்தி கூறினார். அப்போது அவர், தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்த நாளில் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திட நாட்டு மக்களுக்கு எதிரான சக்திகளை வீழ்த்த சபதமேற்போம் என்றார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, செய்தி தொடர்பாளர் பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

    மேலப்பாளையம் ஜின்னாதிடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் முகம்மது அலி தெரு, எம்.என்.பி பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    டவுன்-பேட்டை

    டவுன் லாலுகாபுரத்தில் மாவட்ட பேச்சாளர் சித்திக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை தலைவர் சேக் அப்துல் காதர், செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் அகமது மீரான், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் முஹம்மது கான், மருத்துவ அணி திப்புசுல்தான் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்த்துக்களை பரிமாறினர்

    பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்கள், திடல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×