search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாலையில் இஸ்லாமியர்கள் குவிந்தனர்: தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    காயல்பட்டினம் கடற்கரையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

    அதிகாலையில் இஸ்லாமியர்கள் குவிந்தனர்: தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி :

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் இன்று காலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து க்களை பரிமாறிக்கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் நிர்வாகி சாகுல் ஹமீது தலைமையில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் காயல்பட்டினம் ஜெய்லானி நகர் ஷாகின்பாக் திடலிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இங்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பில் ஹசனா லெப்பை தொழுகை நடத்தினார். அப்துல் பாசித் குத்பா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைப்பின் நகர தலைவர் ஜாபர் சாதிக், செயலாளர் முகம்மது இத்ரிஸ், பொருளாளர் ரைய்யான் சாகுல் ஹமீது உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர்.

    உடன்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திடலில் தலைவர் தவுலத்துல்லா, செயலாளர் குத்புதீன், பொருளாளர் அர்சிக் ரகுமான், துனைத்தலைவர் இப்ராகிம் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். மேலும் சிதம்பர தெரு, பெரிய தெரு, புதுமனை தெரு, முகைதீன் புதுத்தெரு, சுல்தான்புரத்தில் தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட இடங்களிலும், விவிடி சிக்னல் அருகே தனியார் பள்ளியிலும் தொழுகை நடந்தது. கயத்தாறில் ஜூம்மா நயினார் பள்ளிவாசல் சார்பில் பேரணியாக சென்று ஈத்கா திடலில் திரண்டு ஜமாத் தலைவர் பீர் மைதீன் தலைமையில் தொழுகை நடத்தினர். இதில் 870 பேர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சுலைமான் தலைமையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 4 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் சாலையில் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார் . இது போல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும் மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ்வும் பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார்கள்.

    முன்னதாக கமிட்டி சார்பில் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோல் நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர், ரகுமானியாபுரம் , மக்கா நகர் பகுதிகளில் தொழுகை நடத்தினர். இதுபோல் எஸ்.டி.பி.ஐ. சார்பில் இக்பால் நகர் ,மதினா நகர் ஆகிய பகுதிகளில் பெருநாள் தொழுகை நடத்தினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.

    பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல் காதர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ரபீக் ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் குத்தூஸ், இக்பால் நகர் ரய்யான் பள்ளி திடலில் ரயான் மைதீன் , மஹ்மூ நகர் திடலில் குல்லி அலி மதினா நகர் தவ்ஹீத் திடலில் ஹாஜா மைதீன் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் சன்முகம் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா அரிசி வழங்கினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் , வடகரை, வீராணம் ,சங்கரன்கோவில், புளியங்குடி , வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    சங்கரன்கோவிலில் ஈத்கா திடலில் ஜமாத் கமிட்டி தொழுகையை அசரத் முகமது ரபீக் நடத்தினார். தலைவர் அப்துல் காதர், செயலாளர் நயினா முகமது, பொருளாளர் அப்பாஸ், துணைச்செயலாளர் ரக்மத்துல்லா, அப்பாஸ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, ம.தி.மு.க. இளைஞரணி முகமது ஹக்கீம், தே.மு.தி.க. அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×