search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
    X

    மின் ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

    • ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.
    • ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும்.

    சென்னை:

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5 மணி நேரம் நடைபெற்றது.

    உடன் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் ரா.மணிவண்ணன், இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், செயலாளர் ஆ.மணிக்கண்ணன், தொழிலாளர் நலன் கூடுதல் ஆணையர் எம்.சாந்தி, உயர் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 19 மின் வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின்சார வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற முடிவுக்கு நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டு உள்ளன. அதேபோல், 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக அன்றைய தேதியில் இருந்து பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்பதற்கும் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

    ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.

    இந்த ஊதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் பணப்பலன்கள் வழங்கவும், அதே தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை 2 தவணைகளாக அதாவது முதல் தவணை வருகிற ஜூன் மற்றும் 2-வது தவணை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71 கோடியாகும். 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500 வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையை 2 தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும்.

    ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக 3 சதவீதம் ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 548 ஆகும். சராசரியாக வாங்கும் சம்பளத்தில் 9 சதவீதம் அதிகமாக வழங்கப்படும். வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.

    இந்த முடிவை அனைத்து தொழிற்சங்கங்களும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நன்றி தெரிவித்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×