search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
    X

    புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

    • உயர் கல்வி நிறுவனங்களிடையே இடமாறுதல் கோரும் வகையில் மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை.கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

    சென்னை:

    உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளநிலை பட்டப்படிகளில் 5 பாடப்பிரிவுகள் இடம்பெறும்.

    இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.

    இதன்படி, முக்கிய பாடங்களையும் விருப்ப பாடங்களையும், செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். பல்கலைகளும், தன்னாட்சி கல்லூரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு.

    தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராகும் விதமாக, திறன் மேம்பாட்டு அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    பாடத்திட்டம் தொடர்பாக ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இதில், ஏதேனும் நடைமுறை சிக்கல் இருந்தால், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×