search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு
    X

    கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு

    • கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
    • அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ஆதனூர் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1064 மீட்டர் தூரத்திற்கு ரூ.465 கோடி மதிப்பில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கதவணை கட்டுமான பணியில் சீபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் கதவணை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சற்று தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் அறிவழகன் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றியதுடன் அணை கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வந்தது.

    அறிவழகனை ஜேசிபி வாகனத்தால் மோதி கொலை செய்து புதைத்துவிட்டு மறைப்பதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அறிவழகன் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    அவர்களிடம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார், தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய இழப்பீடு தொகையை தருவதாக கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்டதாலும், விதவைகள் மறுவாழ்வு திட்டத்தில் அறிவழகன் மனைவிக்கு அரசு வேலை பெற்றுத் தர ராஜகுமார் எம்.எல்.ஏ, தாசில்தார் மகேந்திரன் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×