search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது- முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக, மார்க்சிஸ்ட் தகவல்
    X

    கே.பாலகிருஷ்ணன்               மு.க.ஸ்டாலின்

    மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது- முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக, மார்க்சிஸ்ட் தகவல்

    • வன நிலங்களில் கால்நடைகள் மேய்க்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    • விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் சந்தித்தனர்.

    இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம்.

    திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

    மாநிலம் முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றிட நீதிமன்றங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.கடந்த காலத்தில் அதிமுக அரசு உரிய ஆவணங்களுடன் வழக்குகள் நடத்தாதன் விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், மக்களை பாதிக்காத வகையிலும் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடுத்து இம்மக்களை பாதுகாக்க வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விஸ்தரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே பொதுமக்களுக்கு விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேனி மாவட்டம், மேகமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு ஊராட்சிகளில் வசிக்கும் மக்களை வன நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.

    இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்.

    மேலும் வன நிலங்களில் கால்நடைகள் மேய்க்க நீதிமன்றம் விதித்துள்ள தடையை அகற்றும் வகையில் அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து கால்நடைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராமதாஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின பள்ளி மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஆய்வு நிறுவனமாக மாற்றவும், அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், கடல்சார், வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடங்களில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களை பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தொல்லியல் பட்டத்திற்கான இணைச் சான்று வழங்கிட வேண்டும்.

    அரசாணை எண் 354 அடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை ஒப்படை செய்ய நடவடிக்கை, திருமங்கலம் முதல் புளியரை வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையை தென்காசி மாவட்டத்தில் முப்போகம் விளையும் விளை நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்தூர் வரை புதிதாக ஆறுவழிச்சாலை முப்போகம் விளையும் நிலங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விளை நிலங்களை பாதுகாக்கும் வகையில் மாற்று வழியில் சாலை அமைத்திட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினோம்.

    முதலமைச்சர் அனைத்துப் பிரச்சனைகளையும் கவனமுடன் கேட்டார். மக்களை பாதிக்கும் வகையில் அரசு எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாது என்றும், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×