search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை தேடி மருத்துவத்தில் 1½ கோடி பேர் பலன் அடைகிறார்கள்
    X

    மக்களை தேடி மருத்துவத்தில் 1½ கோடி பேர் பலன் அடைகிறார்கள்

    • மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர்.
    • மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளுக்காக லட்சக்கணக்கானவர்கள் மாத்திரை சாப்பிட்டு வருகின்றனர்.

    அவர்களில் பலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் வேறு பாதிப்புகள் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    பொதுமக்களில் பலர் பரிசோதனை செய்யாமல் இந்த மாதிரி வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நோய் முற்றிய பிறகே இவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வருகிறது.

    இதனால் பல்வேறு மற்ற வியாதிகளும் இவர்களை பாதிக்கச் செய்து விடுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைத்தார்.

    இதை தொடங்கிய 6 மாதங்களில் 50 லட்சம் பயனாளர்களை இந்த திட்டம் சென்றடைந்தது. இதற்கான விழா மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் அரசு நடத்தியது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்களுக்கு அவர்களது இல்லம் தேடி சென்று மருத்துவ குழுவினர் இடைவிடாமல் மருத்துவ சேவையை செய்து வருகின்றனர்.

    இதில் 10,969 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வீடு வீடாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 4,848 இடைநிலை சுகாதார சேவையாளர்களும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.

    இவர்களிடம் சர்க்கரை வியாதியை அறிந்து கொள்ளும் சுகர் கருவி, ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி ஆகிய இரண்டும் கைவசம் இருக்கும்.

    இதை வைத்து ஒவ்வொரு வருக்கும் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரை வாங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்கு இந்த குழுவினர் தேடிச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்துகின்றனர்.

    இதில் ஒரு பெண் செவிலியர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் என குழுவாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது பாராட்டத்தக்கது.

    அதிலும் குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை கண்டறிந்து இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து அவர்களுக்கான மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெற்று நேரடியாக வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நல பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    இப்போது இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 49 ஆயிரத்து 180 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இதில் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரழிவு நோய் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை சிறுநீரக நோய்க்கு டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 49 லட்சத்து 180 பேர் ஆவார்கள்.

    தொடர் சேவைகள் மூலம் மறுபடியும் 2-வது முறை மருந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் ஆகும்.

    இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் பேணப்பட்டு வருவதாக அதிகாரிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

    இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர். மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த வகையில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இயன்முறை சிகிச்சை பிசியோதெரபி சிகிச்சை, டயாலிசிஸ் செய்வதற்கு உதவிகள் என பல வகை நோய்களுக்கு சிகிச்சை பெற இவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் மேற்கண்ட சிகிச்சை மட்டுமின்றி பெண்கள் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான ஆய்வுக்கு பரிந்துரைப்பதன் மூலமும் ஏராளமான பெண்களும் முன் கூட்டியே சிகிச்சை பெற இந்த திட்டம் உதவிகரமாக அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×