என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிள்ளையாரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளிகள்
- திருமங்கலத்தில் இலவச பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் பிள்ளையாரிடம் மனு கொடுத்தனர்.
- தாசில்தாரை காணவில்லை என கோஷம் எழுப்பினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்ரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் அந்தந்த தாலுகாக்களில் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தநிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் 80-க்கும் மேற்பட்டோர் தங்கள் அனைவரும் தோப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அந்தந்த பகுதியில் வழங்காமல் கரடிக்கல் அல்லது தோப்பூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது வட்டாட்சியர் திருமங்கலம் தாலுகாவில் 13 பேருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கபடும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் மாறுதலாகி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதை அறியாமல் இன்று தாலுகா அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததால் தாலுகா வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பார்வை யற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் குமார் தலைமையில் தாசில்தாரை காணவில்லை என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.