search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமரின் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் திட்டத்தின் கீழ் என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த திட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதிலளிக்காமல், காலம் தாழ்த்தினர். மேலும் இது குறித்து விசாரித்த போது அதே கிராமத்தில் எனது பெயரை கொண்ட வேறொரு நபர் இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்து விட்டு வேறொரு நபரை முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    எனவே எனக்கு அந்த திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,

    பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.வறுமையில் உள்ளவர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த திட்டம் முறையாக வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள் தான் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும்.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனு தாரர் லட்சுமிக்கு 12 வாரத்தில் மானிய தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    Next Story
    ×