search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிற்சி நிறுவனங்களில் உளவுத்துறை கண்காணிப்பு
    X

    பயிற்சி நிறுவனங்களில் உளவுத்துறை கண்காணிப்பு

    • அக்னிபத்’ திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • பயிற்சி நிறுவனங்களில் உளவுத்துறை தீவிர கண்காணித்து வருகிறது.

    மதுரை

    ராணுவ வேலையில் இளைஞர்களை சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை மாவட்டத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

    இதையொட்டி இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மதுரை ெரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 'அக்னிபத்' போராட்டத்தை சில பயிற்சி நிறுவனங்கள் தூண்டி விடுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பதாகவும் மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் திரைமறைவில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, பேரையூர், நாகமலை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் பணிநியமனம் நடந்தால், தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று அவர்கள் மூளைச் சலவை செய்து வருவதாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் பயிற்சி நிறுவனங்கள் 'அக்னிபத்' போராட்டத்தை தூண்டி விடுகிறதா? இதில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்? அக்னிபத் போராட்டத்தை தூண்டி விடுவதில், அரசியல் கட்சிகளுக்கு பங்கு உள்ளதா? என்பது தொடர்பாக மத்திய உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

    Next Story
    ×