search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 16 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    விபத்தில் பலியான குருசாமி, பிச்சை.

    பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 16 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    • மதுரை அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • படுகாயமடைந்த 16பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து 66 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் நேற்று மதியம் போடிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (வயது38) என்பவர் ஓட்டி சென்றார். பாண்டியராஜன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ், முன்னால் சென்ற ஒரு அரசு பஸ்சை முந்த முயன்றது. இதில் தனியார் பஸ் நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து 20அடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தனியார் பஸ்சுக்குள் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததால், அவர்களை மீட்பது பெரும் சிரமமாக இருந்தது.

    எனவே போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த பேரையூர் மேலத்தெருமாணிக்கம் பகுதியை சேர்ந்த குருசாமி(வயது72), டி.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை(65) ஆகிய 2பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளில் 22பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவர்களில் 6 பேருக்கு லேசான காயங்கள் மட்டும் இருந்தன. அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மற்ற 16 பேருக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக சென்ற தனியார் பஸ், அரசு பஸ்சை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×