என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாமரை செல்லியம்மன் கோவில் திருவிழா
    X

      தாமரை செல்லியம்மன் கோவில் திருவிழாவில் தாமரை செல்லியம்மன் கரகம், அரிஜன கரகம் தலை கூடுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். 

    தாமரை செல்லியம்மன் கோவில் திருவிழா

    • 15 ஆண்டுகளுக்கு பின், சந்தூர் கிராமத்தில் நடந்த ஸ்ரீ தாமரை செல்லியம்மன் கோயில் திருவிழாவில் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனை வழிப்பட்டனர்.
    • சந்தூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் பழமையான தாமரை செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரைமைக்கத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது.

    தொடர்ந்து, 66 மண்டல பூஜைகள் நடந்தது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செல்லியம்மன் கோயில் திருவிழா கடந்த 30ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    2-ம் தேதி முனிஸ்வரன் பூஜையும், 3-ம் தேதி, கங்கை பூஜையும், 4-ம் தேதி மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொன் ஏரி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு ஸ்ரீ வீரபத்திரசுவாமி பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், காலை 11 மணியளவில், தாமரை செல்லியம்மன் கரகம், அரிஜன கரகம் தலை கூடுதல், வீரபத்திரசுவாமி மனை கரகம் சந்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சந்தூர், மகாதேவகொல்லஹள்ளி, கங்காவரம், வேடர்தட்டக்கல், பட்டகப்பட்டி, குட்டப்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து, செல்லியம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு குதிரைக்கு பூஜை செய்து அருள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. அம்மன் தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சந்தூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்விழா வருகிற 9-ம் தேதி நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×