என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
- பொதுமக்கள் மயிலம் போலீசாருக்கு மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
- சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மயிலம்:
திருவாரூர் மாவட்டம் கண்டரமாணிக்கம் அக்ரகாரத் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபு (வயது 28). இவர் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது டீசல் நிரப்புவதற்காக திருக்கனூருக்கு சென்றுள்ளார்.
அங்கு டீசல் நிரப்பிய பின் மீண்டும் சென்னையை நோக்கி மயிலம் வழியாக புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டேரிப்பட்டு அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. பின்னர் லாரியில் தீ பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பிரபு உடனடியாக கதவை திறந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் அங்கு கூடிய பொதுமக்கள் மயிலம் போலீசாருக்கு மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






