search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள்
    X

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள்

    • புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
    • வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும் வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 25 ஆயிரத்து 30 வாக்காளர் உள்ளனர்.ஆதார் இணைப்பில் திருப்பூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது. மொத்த வாக்காளர்களில் இதுவரை 52.30 சதவீதம் பேர், அதாவது 12 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களே, ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் கிராம பகுதிகள் முன்னிலையிலும் நகர பகுதிகள் பின்தங்கிய நிலையிலும் உள்ளன.

    66.14 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில், மடத்துக்குளம் தொகுதி முதலிடம் வகிக்கிறது. 60.08 சதவீதத்துடன் உடுமலை இரண்டாமிடத்தில் உள்ளது. 59.38 சதவீதத்துடன் அவிநாசி, 59.13 சதவீதத்துடன் தாராபுரம், 58.15 சதவீதத்துடன் காங்கயம் தொகுதிகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.நகர பகுதிகளான திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள், வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 938 பேரில் 1.32 லட்சம் பேர் (34.47 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 800 வாக்காளர்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் (46.83 சதவீதம்),பல்லடத்தில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 89 ஆயிரம் பேரில் 1.81 லட்சம் பேர் (46.77 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் கிராம பகுதிகளே முன்னிலையில் உள்ளன. திருப்பூர் வடக்கு, பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய நகர பகுதி வாக்காளர் மத்தியில் ஆதார் இணைப்பு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

    இந்த மூன்று தொகுதிகளிலும் இடம்பெயரும் நிலையிலான தொழிலாளர் அதிகம் வசிப்பதே இதற்கு முக்கிய காரணம். வாக்காளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    Voter Helpline செயலி, voterportal.eci.gov.in என் கிற இணையதளம் வாயிலாக, மிக சுலபமாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கலாம். வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×