search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான குத்தாலம் அரசு பள்ளி மாணவர்கள்
    X

    கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான குத்தாலம் அரசு பள்ளி மாணவர்கள்

    • மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான்.

    குத்தாலம்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் சிலரும் அடிமையாகும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கஞ்சா அடிக்கும் சம்பவம்சமூக ஆர்வலர்களை பெரும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக சமீப காலமாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியாகி சக பெற்றோரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் என் மகனை, சக மாணவர்கள் கஞ்சா சாப்பிட்டு விட்டு தாக்கியுள்ளனர். இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான். 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. பள்ளிக்கு வெளியே ஒதுக்கபுறமான ஒரு இடத்தில் இந்த செயல்கள் அரங்கேறி வருகிறது என்று மாணவனின் தந்தை பேசுவது போலவும், அதற்கு தலைமை ஆசிரியர், போலீசில் பல தடவை புகார் கூறினோம். அவர்கள் 3 முறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் சென்று கஞ்சா குடிப்பவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று பதில் அளிப்பதாக அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோ மூலம் அந்த பள்ளியில் மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தடுக்க அதிரடி சோதனை பணியில் ஈடுபட வேண்டும். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை கடந்த பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×