search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  காளியம்மன்  கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    பல்லடம் அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் தரிசனம்

    • 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 22ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமம், குபேர லட்சுமி யோகம், உள்ளிட்ட யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து கோமாதா பூஜை, முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பிரவேசம், முதல் கால வேள்வி, ஆகியவை நடைபெற்றன. பின்னர் 23ந் தேதி அன்று வேதபாராயணம், மகாபூர்ணாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல், விமான கலசம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    பின்னர் மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விநாயகர், முருகர், கவைய காளியம்மன், பரிவார மூர்த்திகள்,கோபுர கலசங்கள் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கவைய காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    Next Story
    ×