என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை
- இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல் பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., – வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் பி.லிட், தமிழ், ஆங்கிலம் ஆகிய அனைத்து கலைப் பாடப்பிரிவுகளுக்கும் வருகிற ஜூன், 19-ந் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வின் போது இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ் எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்) சாதிச் சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், 4 மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவை எடுத்து வரவேண்டும். கலைப்பிரிவுக்கு, 2,100 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,120 ரூபாய், கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,220 ரூபாய் சேர்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும். காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






