search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் அதிகாரி சஸ்பெண்டு - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    X

    கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் அதிகாரி சஸ்பெண்டு - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    • கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
    • இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசா யிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய புலவர் செல்லப்பா, தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்திற்கான விருதை கலெக்டருக்கு வழங்கியுள்ளார். இதற்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    இதை தொடர்ந்து விவசா யிகள் சார்பில் கலெக்டர் அரவிந்துக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.பின்னர் கலெக்டர் அரவிந்த் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் குறுவை தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சி பாறையில் தேனி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    வீர நாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.ஒரே மாட்டிற்கு நான்கு முறை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டம் வழியாக இரவு நேரங்களில் அதிக அளவு கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகிறது.கற்கள் உடைக்கப்படுவதால் வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறுகை யில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நெல் குறுவை தொகுப்பு திட்டமானது, நடப்பாண்டில் டெல்டா அல்லாத சில மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தும் போது வேளாண் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    பேச்சிப்பாறையில் தேனி மகத்துவ மையம் தற்போது செயல்பட்டு வருகிறது. தேனி ஆராய்சி மையம் அமைப்பதற்கான திட்டம் இல்லை. குமரி மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    வீர நாராயணசேரி பெண் அதிகாரி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளதால் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    Next Story
    ×