search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் எலும்பு கூடுகளாக கிடந்தவர்கள் யார்? - மரபணு சோதனை முடிவுக்கு காத்திருக்கும் போலீசார்
    X

    குமரி மாவட்டத்தில் எலும்பு கூடுகளாக கிடந்தவர்கள் யார்? - மரபணு சோதனை முடிவுக்கு காத்திருக்கும் போலீசார்

    • 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர்
    • மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த 2-ந் தேதி மனித எலும்புக்கூடு கிடந்ததை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கோட்டார் போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர். எலும்பு கூடாக கிடந்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் கிடைக்காததால், அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை எடப்பாடு பகுதியில் கடலுக்கும் ஏ.வி.எம். கால்வாய்க்கும் இடையே தனியார் நிலத்தில் மற்றொரு எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கொல்லங்கோடு போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மழை நீர் வடித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடையில் தலையில்லாத எலும்புக் கூடு கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் இறந்தவர் ஆணா? பெண்ணா? யாரையாவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றார்களா? என பல கேள்விகள் எழுந்தன.

    மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மாவட்டத்தில் மாயமானவர்களின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர். அதன் முடிவுகள் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் வர வேண்டி உள்ளது. அது கிடைத்த பிறகு, மாயமானவர்கள் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தான் எலும்புக்கூடாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்தார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தார்களா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×