search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நீட் தேர்வு இருக்காது - திருச்சி சிவா எம்.பி. பேச்சு
    X

    இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நீட் தேர்வு இருக்காது - திருச்சி சிவா எம்.பி. பேச்சு

    • தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு
    • மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முதலில் விதித்திட்டது திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் பணிகளையும், தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு. அண்ணா காட்டிய வழியை கருணாநிதி பின்பற்றினார். அந்த மரபை தொடர்ச்சியாக செயல்படுத்தி தமிழகத்தில் தலை சிறந்த ஆட்சியை அளிக்கிறார் மு.க.ஸ்டாலின். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது.

    இந்தியாவிலேயே ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது. பா.ஜனதா கட்சி ஆட்சி இதுவரை இல்லாத அளவிற்கு பல வேதனைகளை மக்களுக்கு உருவாக்கி இருக்கின்றது.

    உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பல காரியங்கள் செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது நீட் தேர்வு இருக்காது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் கருணாநிதியின் நூற்றாண்டு விழா எழுச்சியோடு இன்று கொண்டாடப்படுகிறது.

    அண்ணாவின் பெயர் சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் கிடையாது. இந்த நாட்டில் அண்ணா, பெரியார், கலைஞர் பிறந்திருக்காவிட்டால் நமது கதி என்னவென்று நினைத்து பாருங்கள்.

    திராவிட கழகம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுவுடமை ஆகும். வரலாற்றை பார்த்தால் தெரியும் தி.மு.க.விற்கு பதவி சுகம் இல்லை எனவும் தமிழர்களின் உரிமையை பாதுகாத்து மீட்டுக்கொண்டு வருவதும் ஆகும். காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக மாணவ- மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×