என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு கோவில் முன்பு உள்பட 13 இடங்களில் போராட்டம்
    X

    மண்டைக்காடு கோவில் முன்பு உள்பட 13 இடங்களில் போராட்டம்

    • மாற்று மதத்தினர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதாக போராட்டம்
    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ உள்பட 725 பா.ஜனதாவினர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 12 கோவில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடை பெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தங்கத்தேர் பவனி மற்றும் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

    கோவில் நிர்வாக மண்டல துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், ஆய்வாளர் செல்வி, மராமத்து பொறியாளர்அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் மற்றும் கோவில் பணியாளர்கள், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபர்ட் கிளாரன்ஸ், ஜெய சந்திரன், முருகன்உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

    முன்னதாக திருவிளக்கு பூஜை விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்வதாக அறிவிக்க ப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கோவில் ஆகம விதிமுறைகளை மீறியும், இந்து ஆச்சாரங்களுக்கு முரணாகவும் மாற்று மதத்தினர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள் மண்டைக்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து லட்சுமிபுரம், மண்டைக்காடு சந்திப்புகளில் பேரி கார்டு கள் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் பல ப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை மீறி மண்டைக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ரெத்னபாண்டியன், ஸ்ரீ பத்மநாபன் உள்பட பலர் கோவில் முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் இருந்து மண்டைக்காட்டுக்கு காரில் புறப்பட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வை, டெரிக் சந்திப்பு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இரணியல் அருகே மேக்கோடுபகுதியில் வந்த மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டவர்களை இரணியல் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று குருந்தன்கோட்டில் இருந்து 3 வேன்களில் வந்த பா. ஜனதாவினரை திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் பரமேசுவரன் தலைமையில் அவர்கள் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வக்கீல் சிவகுமார் உட்பட 94 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் லட்சுமி புரம், திங்கள்நகர், நட்டாலம், தக்கலை, தென்தாமரை குளம் ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்க ளையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் போராட்டம் நடத்தியதாக 725 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் குமாரகோவில் பகுதியில் நடந்த முருகன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. தற்போது 2-வது முறை யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×