search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலனுடன் சுற்றிய மாணவியை சரமாரியாக தாக்கிய பெற்றோர்
    X

    காதலனுடன் சுற்றிய மாணவியை சரமாரியாக தாக்கிய பெற்றோர்

    • இன்னொரு ஜோடியும் சிக்கியதால் பரபரப்பு
    • பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி

    நாகர்கோவில், ஜூன்.16-

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல தொடங்கினர். இதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையங்களில் காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இளம் பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் சுற்றித்திரிந்தார். போலீசார் அந்த ஜோடியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பிடிபட்ட வாலிபர் வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இளம்பெண் அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறினார்.

    மேலும் வீட்டிலிருந்து இன்று காலை புறப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு மாற்று உடையில் காதலனுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரியும் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு போலீஸ் பிடியில் இருந்த தனது மகளை தாயார் சரமாரியாக தாக்கினார். சகோதரியும் அவர் பங்குக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்தனர். இதே போல் இன்னொரு ஜோடியும் போலீசாரிடம் சிக்கியது. நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த போது போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் போலீசாரிடம் ரோந்து பணியின் போது காதல் ஜோடிகள் சிக்கினர். அந்த ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் நடமாட்டம் பஸ் நிலையத்தில் மட்டும் இன்றி நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×