search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் குளறுபடியை சரி செய்ய வேண்டும்
    X

    குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் குளறுபடியை சரி செய்ய வேண்டும்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் குளத்து பாசனம் மற்றும் சானல் பாசனம் மூலம் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என ஆண்டுக்கு இருமுறை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

    நெல் மணிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்வதற்காக பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல் மணிகளை 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்வோம் என்றும் மற்றும் பல காரணங்களை கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை காத்திருக்க வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் அரிசி ஆலைகளில் தங்களுடைய நெல்மணிகளை விற்பனை செய்யப்படுகின்ற அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    குறிப்பாக அரசு ஒரு கோட்டை நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஒரு கிலோ ரூ.22.65 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் செய்கின்ற அதிகாரிகள் மறைமுகமாக விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு கோட்டை நெல்லுக்கு 5 கிலோ சாவி என கழித்து விடுகின்றனர். மேலும் ஒரு சாக்கு மூட்டையில் 40 கிலோ எடைக்கு பதிலாக 41.5 கிலோ எடை எடுத்து கொள்கின்றனர். ஆனால் கணக்கில் வைப்பது 40 கிலோ மட்டுமே ஆகும்.

    மேலும் அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு அதற்கான தொகையினை குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரை காலம் தாழ்த்தி கொடுக்கின்றனர். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள குளறுப்படிகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×