search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பார்த்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்
    X

    செல்போன் பார்த்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்

    • பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வு எதற்காக அரசு நடத்துகிறது என்பதை மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலகட்டங்களில் நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்கள் என்பதை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.

    மேலும், நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், களரி, கோ-கோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் போது உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, உங்களின் திறமையும் வெளிப்படுகிறது.

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விளையாட்டுகளை மறந்து மொபைல் போனில் வரும் விளையாட்டுகளை தொடர்ந்து பார்ப்பதால் உங்களின் கண்பார்வை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்களின் ஒரே ேநாக்கம் நன்றாக படித்து வாழ்வில் உன்னத நிலையினை அடைய வேண்டுமென்ற லட்சிய நோக்குடன் உங்கள் பயணத்தினை மேற்கொள்வதோடு, உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் கலந்துரையாடுவது, பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

    மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட என் குப்பை எனது கடமை என்பதை நாம் உணர்ந்து உங்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணுபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட உங்களது பெற்றோர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டு வதோடு, இக்குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களின் முக்கிய பங்கு அனைவரும் மொபைல் போன் தவிர்ப்பது மற்றும் என் குப்பை எனது கடமை என்ற இரண்டினையினையும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலா வாணி, அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சனில் ஜாண், பள்ளி முதல்வர் அருட்பணி லிஸ்பத், துணை முதல்வர் அருட்பணி டோஜி செபஸ்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×