search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்
    X

    குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலரின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன்படி நாகர்கோவில் கல்வி மாவட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பகுதிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தின் கீழ் குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகள் மற்றும் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தின் கீழ் கொல்லங்கோடு நகராட்சி மற்றும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தின் கீழ் குழித்துறை நகராட்சி பகுதிகள் மற்றும் மேல்புறம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

    அந்தந்த கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளி, நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்களும் அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நான்கு மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் அரசாணை எண் 151 -என்ற புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    அந்த அரசாணைபடி, மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில் பகுதியில் ஒரு கல்வி மாவட்ட அலுவலகமும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கென ஒரு மாவட்ட கல்வி அலுவலகமும் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.

    அரசின் இந்த முடிவு குமரி மேற்கு மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களை கொண்ட மார்த்தாண்டம் பகுதியை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது.

    இதனால் கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    எனவே குமரி மாவட்டத்திலுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    மேலும் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும். மேலும் குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×