என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் அருகே சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளை
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று பிரார்த்தனை முடிந்து இரவு ஆலயத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த ஆலயத் துக்குள் இருந்த ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, மைக், போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.






