search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு  அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    X

    கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்

    நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவிகளும் அதிகளவில் போட்டி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தற்போது போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி பெற்ற 12 பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று இன்று அதிகாரிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விடாமுயற்சியுடன் நாம் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

    அரசியலில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றிபெற விடாமுயற்சி தேவை. எம்.எல்.ஏ.வாக நான் தேர்வாக 35 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டி இருந்தது. உங்கள் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஜாதியோ, மதமோ அதை முடிவு செய்ய முடியாது. நீங்கள் மட்டும் தான் உங்கள் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். உங்கள் உழைப்பு தான் வாழ்வில் உங்களை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நிர்ணயம் செய்யும்.

    எனவே மாணவ-மாணவிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தனக்கான இலக்கை அடைய வேண்டும். அதிகளவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தக்கூடிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பகுதிகளில் அமர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இமானுவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    குறும்பனையில் ரூ.30 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைத்தார். குறும்பனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×