search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் பொதுமக்கள்
    X

    குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் பொதுமக்கள்

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
    • காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதார துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் உள்பட 9 தாலுகாக்களில் தலா 3 இடங்களிலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. ஒரு குடும்பத்தில் முதலில் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் மற்ற அனைவரும் காய்ச்சலால் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காய்ச்சலுடன், சளி தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.

    கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலை இருந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கால், கை வலி உட்பட உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கிறார்கள். சமீபகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

    இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் போது, ஒரு சிலர் மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்து அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சலுடன் பல்வேறு இடங்களில் மெட்ராஸ் ஐ நோயும் பரவி வருகிறது.

    பொதுமக்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக் கையை விட தற்போது காய்ச்சலுக்கு சிகிச்சை வருபவர்கள் எண்ணிக்கை அதிக ரித்து உள்ளது. பொதுமக்கள் காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு வாந்தி ஏற்பட்டு வருகிறது. வாந்தி ஏற்படுவதால் சோர்வு ஏற்படும்.

    சோர்வை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான நீர் ஆதாரங்களை கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்தி ரியில் உள்ள டாக்டர்களை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது என்றார்.

    Next Story
    ×