search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு இலவச பஸ் விடப்படும்
    X

    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு இலவச பஸ் விடப்படும்

    • கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து இயக்க திட்டம்
    • தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி பேட்டி

    கன்னியாகுமரி:

    சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்றார்.

    அவரை கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய அறங்காவலர்குழு உறுப்பினர்கள் மற்றும் தென்தாமரைகுளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரைதினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜனவரி மாதம் வருஷாபிஷேக விழாவும் பிப்ரவரி மாதம் முதல் முறையாக பிரமோற்சவ திருவிழாவும் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ திருவிழாவின் போது 12 வாகனங்கள் பயன் படுத்தப்பட உள்ளன.

    கன்னியாகுமரியில் மார்ச் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படும். கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தற்போது லட்டு விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த குறை விரைவில் போக்கப்படும். அதேபோல திருப்பதியில் மட்டும் தான் முடி காணிக்கை செலுத்தப்படும். இங்கு அதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை. மேலும் கோசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ் விடப்படும். இந்த இலவச பஸ் சேவை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×