search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளது
    X

    குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளது

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    • 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் தற்பொழுது சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், பறக்கை உட்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது.

    உழவர் செயலி மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றால் விதை நெல் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தங்கு தடை இன்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது பொன்மணி, திருப்பதிசாரம் 3 விதை நெல்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொன்மணி ரக நெல்லை இனி பயிர் செய்தால் காலதாமதம் ஏற்படும். எனவே திருப்பதி சாரம் 3 ரக நெல்லை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. தாழக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பதி சாரத்திலுள்ள வேளாண் விதை மையத்தில் 12 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு அந்த விதை பண்ணையை குத்தகைக்கு வழங்க வேண்டும். அதில் விவசாயிகள் பயிர் செய்வார்கள்.

    செண்பகராமன்புதூர் பகுதியில் தென்னை மேம்பாட்டு கழகம் பல ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது பொன்மணி, திருப்பதி சாரம் 3 ரக நெல்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2-வது பருவத்தில் 5,845 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள விதை நெல்களை விவசாயிகளே தயார் செய்து விடுவார்கள்.

    அதன் அடிப்படையில் தற்போது 92 டன் விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவை என்றால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி சாரத்தில் 40 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு 30 ஏக்கர் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இனி வரும் பருவத்தில் 31 ஏக்கரில் நெல் விதை பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×