search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

    • ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளது. தற்பொழுது மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததையடுத்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் முக்கடல் அணை நீர்மட்டம் கோடை வெப்பத்தின் காரணமாக நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்ததையடுத்து 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து அதன் மூலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி முதல் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் லாரிகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் சப்ளை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி குடிநீர் லாரியில் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடசேரி சோழராஜா கோவில் தெரு பகுதியில் இன்று லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் காத்திருந்து தண்ணீரை பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீருக்காக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மாநகராட்சி சார்பில் லாரியில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கோடை காலங்களில் இன்னும் பல கஷ்டங்கள்பட வேண்டி இருக்கும். கேன்களில் தண்ணீர் வாங்க ரூ.25 செலவு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது என்றனர்.

    Next Story
    ×