search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    X

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் அரவிந்த் வழங்கினார்

    • பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் போதை பொருள் தடுப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி குமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய வாகன ஒட்டுவில்லையினை வெளியிட்டு வாகனங்களில் ஒட்டுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.

    அதோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நனர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×