search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.251.43 கோடியில் குடிநீர் திட்டம்
    X

    ரூ.251.43 கோடியில் குடிநீர் திட்டம்

    • புத்தன் அணையில் மேயர் மகேஷ் நேரில் ஆய்வு
    • தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தற்போது தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் போதுமான அளவு பொதுமக்களுக்கு இல்லாததால் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்கு ரூ.251 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பைப் லைன் அமைக்கும் பணி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி மேயர் மகேஷ் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக மேயர் மகேஷ் இன்று காலை புத்தன் அணைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத பைப் அமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 420 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்படுகிறது.

    இதில் தற்பொழுது 380 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். மே 31-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தும் முழுமை பெறும்.

    இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படும். 4 லட்சம் மக்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள். 85 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளோம். ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×