search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி விபத்தில் 2 பேர் பலி - கார் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    X

    பூதப்பாண்டி விபத்தில் 2 பேர் பலி - கார் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    • உமாவுக்கு தலைப்பொங்கல் என்பதால் காக்கமூருக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்ல உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
    • பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உலகம்மாள் (வயது 75)ஏற்கனவே சுப்பிரமணிய பிள்ளை இறந்து விட்டார்.

    இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவை சுசீந்திரம் அருகே காக்கமூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தனர்.உமாவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. உமா தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வருகிறார். உமாவுக்கு தலைப்பொங்கல் என்பதால் காக்கமூருக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்ல உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று காலை காரில் உமாவின் தாய் சுபா (55), பாட்டி உலகம்மாள் மற்றும் பிரேமா (45), சுப்புலட்சுமி (55), உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்தின் மனைவி உமா (50) சுப்புலட்சுமியின் பேத்தி சிபிக் ஷா (2) ஆகியோர் புறப்பட்டனர். காரை அழகிய பாண்டிய புரத்தைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர் ஓட்டினார். பூதப்பாண்டி தாழக்குடி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    இதில் உலகம்மாள், உமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்ந்த னர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்து குறித்து சுபா கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான உலகம்மாள், உமாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×