என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இணைத்து இயக்க வேண்டும்
    X

    2 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இணைத்து இயக்க வேண்டும்

    • பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • திருநெல்வேலி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கொச்சுவேலி ரெயில்களை இயக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    ரெயில்வே துறை பல்வேறு வழித்தட ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக இயக்கி வருகிறது. புனலூர்-குருவாயூர், கொல்லம்-செங்கோட்டை, செங்கோட்டை-மதுரை ஆகிய 3 ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக மதுரை-குருவாயூர் என்று இயக்கப்படுகிறது. கடந்த மாதம் மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக மயிலாடுதுறை-சேலம் என்று இயக்கப்பட்டது. இதற்கு முன்பும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரெயில் மற்றும் திண்டுக்கல்-மயிலாடுதுறை ஆகிய 2ரெயில்களையும் இணைத்து நீட்டிப்பு செய்தும் ஒரே ரெயிலாக செங்கோட்டை-மயிலாடுதுறை என்று அறிவிக்கப்பட்டு பல மாதங்களாக இயங்கி வருகிறது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம்-நிலாம்பூர் பயணிகள் ரெயில்களை இணைத்து 173 கி.மீ. தூரத்துக்கு ஒரே ரெயிலாக கோட்டயம்-நீலாம்பூர் ரெயில் என இயக்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் எந்த ஒரு ரெயிலும் இவ்வாறு இணைத்து இயக்கப்படவில்லை என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

    மேலும் இந்த சங்கம் சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் கோட்டயம் சென்று விட்டால், மறு மார்க்கம் கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படுவது கிடையாது. ஆகையால் இந்த ரெயிலை மறுமார்க்கமாக இயக்க வேண்டும். அதற்கு தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில பயணிகள் ரெயில்களை இணைத்து ஒரே எண் கொண்ட ரெயிலாக கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கி பின்னர் இந்த ரெயிலை திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில் திருநெல்வேலியில் இருந்து காலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வரும் ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக நாகர்கோவில் வருமாறு கால அட்டவணையை சிறிய அளவில் மாற்றம் செய்து நாகர்கோவில்-கொச்சுவேலிரெயிலுடன் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

    மறுமார்க்கமாக கொச்சு வேலியில் இருந்து மதியம் புறப்படும் ரெயிலின் கால அட்டவணையை மாற்றி மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 6.15 மணிக்கு நாகர்கோவில் வந்து இங்கிருந்து நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயிலையும் இணைத்து திருவனந்தபுரம்-திருநெல்வேலி ஒரே ரெயிலாக இயக்க வேண்டும். கன்னியாகுமரி-திருப்பதி நேரடி ரெயில் தற்போது மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்ட பகுதிகளிலிருந்து திருப்பதிக்கு செல்ல நேரடி தினசரி ரெயில் சேவை இல்லை. மதுரையிலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

    ஆகவே தற்போது திருப்பதியிலிருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், மதுரை-விழுப்புரம் ரெயில் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி - திருப்பதி என்று இயக்க வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்ட பயணிகள் வசதிக்காக திரு நெல்வேலி -செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரெயில் ஆகியவற்றை இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி - கொல்லம் என்று இயக்க வேண்டும். இதேபோல் செங்கோட்டை- –திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி-திருச்செந்தூர் ஆகிய 2 ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக செங்கோட்டை –திருச்செந்தூர் என்று இயக்க வேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் மதுரைக்கு தெற்கு உள்ள பகுதிகளில் இருந்து நேரடி ரெயில் இல்லை. தற்போது நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர ரெயிலின் பெட்டிகளை வைத்து தான், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக கன்னியாகுமரி-ஜோத்பூர் வழி மதுரை, சென்னை என்று இயக்க வேண்டும்.

    தற்போது தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களுக்கு செல்ல நேரடி ரெயில் சேவை இல்லை. இதனால் பயணிகள், குறிப்பாக வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக மதுரை-புனலூர் இரவு நேர ரெயிலையும், திருச்சி-காரைக்கால் மெமோ ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக புனலூர்-காரைக்கால் என்று இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இந்த கோரிக்கைக்கு ரெயில்வே துறை இதுவரை செவி சாய்க்கவில்லை.

    குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக மற்ற பகுதிகளில் இயக்கப்படுவதை போன்று இங்கும் 2 ரெயில்களை இணைத்து இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×