search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 5 நாட்கள் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?

    • செல்போனில் பேசிய அசாம் வாலிபரிடம் மங்களூரூ போலீசார் இன்று விசாரணை
    • கன்னியாகுமரி,சுசீந்திரம் பகுதியில் நாசவேலைக்கு திட்டமிட்டாரா?

    நாகர்கோவில்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரூ அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், அதில் வந்த ஒருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரூ போலீசார் விசாரணை நடத்திய போது, ஆட்டோ வில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என தெரிய வந்தது. படுகாயத்துடன் மீட்கப்பட்டவர் தான் அதனை கொண்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவனது பெயர் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் என்பதும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அவன் ஏற்கனவே போலீஸ் கண்காணிப்பில் இருந்துள்ளான். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவன் திடீரென மாயமாகி உள்ளான்.

    அதன்பிறகு கடந்த மாதம் கர்நாடக மாநிலம் திரும்பிய அவன், மங்களூரூ ரெயில் நிலையத்தை தகர்க்கும் முயற்சியில் இறங்கிய போது தான், எதிர்பாராதவிதமாக ஆட்டோவிலேயே குண்டு வெடித்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் உளவுத்துறை போலீசாரும் விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில் முகமது ஷாரிக்கின் செல்போனை மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவன் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களுடன் பேசியிருப்பது தெரியவந்தது.

    அதில் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரது எண்ணும் இருந்தது. இதுபற்றி மங்களூரூ போலீசார், குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனைப்படி போலீசார் விசாரணையில் இறங்கினர். நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் யார்? என்பதை கண்டு பிடித்து விசாரித்தனர்.

    அந்தப் பெண் தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவன் மொழி தனக்கு புரியவில்லை என்பதால், தங்களது துரித உணவகத்தில் பணிபுரிந்த அசாம் வாலிபரிடம் செல்போனை கொடுத்து பேசச் சொன்னதாகவும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாரில் அறை எடுத்து தங்கி இருந்த அசாம் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனும், பெண் கூறிய தகவலையே தெரிவித்தான். தான் அந்த செல்போனை வாங்கி பேசியதும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் கூறினான். இருப்பினும் அவனிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேர விசாரணைக்குப் பிறகு போலீசார், அவரை விடுவித்தனர்.

    இதற்கிடையில் ஆகஸ்ட் மாதம் மாயமான ஷாரிக், எங்கு சென்றான் என போலீசார் தீவிர விசா ரணை நடத்தியதில், அவன் தமிழகம் வந்து கோவை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் அறை எடுத்து தங்கியதும் அதன் பின்னர் கேரளா சென்றிருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக மங்களூரூ போலீசார் மற்றும் உளவுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். என்.ஐ.ஏ. அமைப்பினர் கேரளாவில் சென்று விசாரணை நடத்தினர். மங்களூரூ போலீசார் கோவை, மதுரை சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் என்ற பெயரில் விடுதியில் அறை எடுத்து ஷாரிக் தங்கியது தெரியவந்தது. அங்கு சில தகவல்களை சேகரித்த மங்களூரூ போலீசார், நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

    மங்களூரூ போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் குமார் தலைமையில் வந்த குழுவினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஷாரிக், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நாகர்கோவில் விடுதியில் தங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு மாவட்ட போலீசார் துணையுடன், மங்களூரூ போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது ரெயில் மூலம் நாகர்கோவில் வந்த ஷாரிக், அண்ணா பஸ் நிலையம் அருகே ஒரு விடுதியில் பிரேம்ராஜ் என்ற பெயரில் போலி முகவரி கொடுத்து அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் குறிப்பிட்ட விடுதிக்குச் சென்ற போலீசார், அங்கு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    ஷாரிக் விடுதியில் தங்கியிருந்த போது அவனை சந்தித்தது யார்? அவன் எப்போது வெளியில் சென்றான்? என்பது தொடர்பாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விடுதி வாடகையை பணமாக செலுத்தினானா? அல்லது அவனுக்காக யாராவது ஆன்லைன் மூலம் செலுத்தினார்களா? என பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஷாரிக்கை விடுதிக்கு வந்து யாரும் சந்திக்கவில்லை என்பதும், ஷாரிக் 2 நாட்கள் வெளியே சென்று வந்தான் என்பதும் தெரியவந்தது. அவன் வெளியே சென்று யாரை சந்தித்தான் என போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    அறையில் இருந்து 2 நாட்கள் வெளியே சென்ற ஷாரிக், கன்னியாகுமரி, சுசீந்திரம் ரதவீதிகளில் சுற்றித் திரிந்துள்ளான். கன்னியாகுமரிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் அங்கு ஏதும் சதி செயலை அரங்கேற்ற ஷாரிக் திட்டமிட்டிருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்தப் பகுதிகளில் அவன் யாரை யாவது சந்தித்திருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளில் ஷாரிக் யாரை சந்தித்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் ஷாரிக், நாகர்கோவிலுக்கு ரெயிலில் வந்தபோது, அவனை யாராவது வரவேற்று அழைத்துச் சென்றார்களா? என்பது தொடர்பாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் மங்களூரூ போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் நாகர்கோவில் துரித உணவகத்தில் வேலை பார்த்த அசாம் வாலிபருக்கு தொடர்பு இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அசாம் வாலிபரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மங்களூரூ போலீசார் கேரளா சென்றனர். அங்கும் அவர்கள் ஷாரிக் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×