search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்வு
    X

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் செல்ல படகு துறையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

    கன்னியாகுமரியில் லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்வு

    • தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரம் படுத்து உறங்கும் மக்கள்
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி

    கன்னியாகுமரி:

    உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னி யாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதனால் தற்போது கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன்களை கட்டி உள்ளது.இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை ஆர்வத்துடன் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் பகவதி அம்மன்கோவில், திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    இது தவிர கன்னியாகுமரி யில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுனாமி நினைவு பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகிறார்கள். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்கள்.

    அதன் பிறகு சுற்றுலா பயணிகள் கூடுதலாக ஒருசில நாட்கள் லாட்ஜிகளில் தங்கிஇருந்து கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர்தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம்பீச், சொத்தவிளை பீச், வட்டக் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டு செல்கிறார்கள்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம், போன்ற தொடர் விடுமுறை காரண மாகவும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில் மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் 106 லாட்ஜ்கள் இருந்த பிறகும் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திண்டாடுகிறார்கள். இந்த சீசனை பயன்படுத்தி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்ந்துஉள்ளது. சீசன் இல்லாத காலங்களில் ரு.1000 வாடகைகட்டணம் உள்ள 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைவாடகை தற்போது சீசனையொட்டி 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு வாடைக்கு விடப்படுகிறது. அதேபோல ரூ.2 ஆயிரம் வாடகை உள்ள 2 படுக்கை கள் கொண்ட"குளுகுளு" வசதியுடையஅறை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

    தற்போது இந்த லாட்ஜ்களில் உள்ள அறை கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சாலையோரம் படுத்து தூங்கும் அவல நிலை ஏற்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் ஒரு சில சுற்றுலா பயணி கள் கன்னியாகுமரியில் தங்கு வதற்கு அறை கிடைக்காத தால் நாகர்கோவில் போன்ற வெளியூர்களுக்கு சென்று தங்கி இருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

    எனவே கன்னியா குமரியில் சீசன் காலங்க ளில் லாட்ஜ்களில் அறை வாடகையை தாறு மாறாக உயர்த்துவதை கட்டுப்படுத்த வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதே போல கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலை அந் தந்த லாட்ஜ்களில் வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×