search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகளின் விருப்பத்துக்கு மாறாக பேராசிரியர் ஆபாசமாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆரில் பரபரப்பு குற்றச்சாட்டுகள்
    X

    மாணவிகளின் விருப்பத்துக்கு மாறாக பேராசிரியர் ஆபாசமாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆரில் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

    • இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவான்மியூர் கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரபரப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு போட்டுள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 509 என்கிற சட்ட பிரிவு பெண்ணின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சட்டப்பிரிவாகும். இந்த சட்டப்பிரிவின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    354-ஏ.ஐ.பி.சி. என்கிற சட்டப்பிரிவும் கடுமையான சட்டப்பிரிவாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் வகையில் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்ளுதல் என்பது இந்த சட்ட பிரிவின் சாராம்சமாகும். இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 3 சட்டப்பிரிவுகளின் கீழும் பேராசிரியர் அரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைதானால் உடனடியாக பெயில் கிடைக்காது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறைவாசம் அனுபவித்து போலீசார் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ள அவர் இது தொடர்பான அறிக்கையை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரசிடம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த அறிக்கையின்படியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×