search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகள் பாலியல் புகார்: கலாசேத்ரா பேராசிரியர் அதிரடி கைது
    X

    மாணவிகள் பாலியல் புகார்: கலாசேத்ரா பேராசிரியர் அதிரடி கைது

    • கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் பணி புரிந்து வரும் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அடையாறு மகளிர் போலீசில் அவர் அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர்கள் நெல்சன், சுதர்சன் மற்றும் தனிப்படை போலீசார் கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். கேரள மாணவி அளித்திருந்த புகாரில் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் பற்றி தன்னுடன் படித்த தோழிகள் 5 பேருக்கு தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து கேரள மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டவும், அது தொடர்பான உண்மை தன்மையை கண்டறியவும் முடிவு செய்த தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேராசிரியர் ஹரி பத்மனின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.

    இதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் சென்னையில் முன்னாள் மாணவிகள் சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

    இப்படி போலீஸ் விசாரணையில் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் போலீசுக்கு கிடைத்தன. இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த ஹரிபத்மன் 2 நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பினார்.

    மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகே ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதன்படி வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்கள் போலீசுக்கு முழுமையாக கிடைத்தன.

    இதையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீதான பிடி இறுகியது. அவரை கைது செய்ய போலீசார் தேடினர். அப்போது ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய பிறகு வடசென்னை பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். நண்பரின் வீட்டில் இருந்து அடையாறு தனிப்படை போலீசார் ஹரி பத்மனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ரகசிய இடத்தில் வைத்து ஹரிபத்மனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது ஹரிபத்மன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதனை போலீசார் வழக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பேராசிரியர் ஹரிபத்மன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதன் பிறகு கூடுதல் விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் பேராசிரியர் ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் கலாசேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×