என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.
    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது45).

    அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.

    நேற்று மதியம் அவர் அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் சீனிவாசனை வழிமறித்து வெட்டி கொன்று தப்பி சென்று விட்டனர். சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    கொலையுண்ட சீனிவாசன் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்து இருக்கிறார். எனவே நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட மோதலில் யாரேனும் சீனிவாசனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அவரது செல்போனில் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாயமான சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் சோத்துப்பாக்கம் வந்தவாசி சாலையில் உள்ள செடிவாக்கம் கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

    கொலைக் கும்பல் அவ்வழியாக வந்தவாசி அல்லது திருவண்ணாமலைக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.

    சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.

    இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அச்சரப்பாக்கத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    சீனிவாசன் கொலை குறித்து அவரது தம்பி பாஸ்கர் கூறும்போது, “அண்ணன் தினமும் காலையில் நடைபயிற்சிக்கு வெளியில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக சீனிவாசன் நடை பயிற்சிக்கு செல்லவில்லை. ஒருவித பயத்துடன் இருந்தார்.

    இதுபற்றி கேட்டபோது, யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு ஏற்கனவே மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து இருக்கலாம். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
    முட்டுக்காடு படகுதுறையை ஆய்வு செய்த உ.பி.மாநில தலைமை செயலக அதிகாரி மனைவி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    திருப்போரூர்:

    டெல்லியில் உள்ள ஆசிய வங்கியில் அதிகாரியாக இருந்தவர் ‌ஷர்மிளா சிங் (வயது 45). இவரது கணவர் உத்திரபிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளார்.

    முட்டுக்காடு படகுத்துறை, முதலியார்குப்பம் படகுத்துறை ஆகியவற்றின் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஆசியன் வங்கியின் சார்பில் நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்காக இப்பகுதிகளை பார்வையிட ‌ஷர்மிளாசிங் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நேற்று சென்னையிலிருந்து முட்டுக்காடு படகுத்துறைக்கு வந்தனர்.

    அவர்கள் முட்டுக்காடு படகுத்துறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது ‌ஷர்மிளாசிங்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.

    உடனடியாக அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ‌ஷர்மிளாசிங் இறந்து போனார்.
    சென்னை விமான நிலையத்தில் மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி கிரிராஜ்சிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    மோடியின் கடந்த 2 ஆண்டு ஆட்சி சிறப்பாக உள்ளது. மத்திய அரசின் 'மேக்இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி சரியாக மேம்படுத்தப்படவில்லை.

    ஆனால் மோடியின் ஆட்சியில் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து வழிகள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதம் ஆனதால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் தினமும் காலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து முத்துநகர், அனந்தபுரி, ராமேஸ்வரம், விழுப்புரம் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி ரெயில்களில் சென்னைக்கு செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக தாமதமாக வரும் ரெயில்களில் அவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியாக கூறவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மதுராந்தகம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வருவதாக ரெயில் நிலையத்தில் அறிவித்தனர். இதனால் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலைய ஊழியர்கள் 7 மணி அளவில் தாமதமாக வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு முன்பே ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் தவித்தனர்.

    பயணிகளின் மறியல் போராட்டம் பற்றி அறிந்ததும் ரெயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் மேலும் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. பயணிகள் புலம் பியபடி அதே ரெயிலில் ஏறிச் சென்றனர்.

    சென்னை விமானத்தில் உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்த ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவை சோதனை செய்தபோது அவர் உள்ளாடையில் மறைத்து ½ கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.

    இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து பத்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பல்லாவரத்தில் கார் டிரைவரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலந்தூர்:

    ஆவடி, ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கால்டாக்சி டிரைவர்.

    இவர் இன்று காலை சென்னை விமான நிலையம் ‘கார்கோ’ பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார். அப்போது தனது செல்போனை காரில் ‘சார்ஜரில்’ பொருத்தி இருந்தார்.

    அவ்வழியே ஆட்டோவில் வந்த வாலிபர் திடீரென காரில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு வேகமாக சென்றார். இதனை கவனித்த ஆனந்தராஜ் கூச்சலிட்டப்படி தனது காரில் அவனை விரட்டிச் சென்றார்.

    சத்தம் கேட்டு அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் நாகூர் மீரான் மற்றும் பொதுமக்கள் சிலரும் கொள்ளையனை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த துரத்தலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிற்காமல் தப்பிய வாலிபர் மின்னல் வேகத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

    பல்லாவரம், சந்தை சாலையில் சென்றபோது பெரிய கல்லில் மோதி ஆட்டோ நின்றது. அதில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற வாலிபரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

    அப்போது கையில் வைத்திருந்த பிளேடை காட்டி மிரட்டிய வாலிபர் “அருகில் வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறினார். திடீரென அவன் தனது கழுத்து, கை, மார்பில் பிளேடால் கிழித்தான்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த அவனை மடக்கி பிடித்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அவனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவன் வடபழனியைச் சேர்ந்த ஜான்பால் என்பது தெரிந்தது. அவனிடம் மீனம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் பரங்கிமலையில் போக்குவரத்து போலீஸ் பூத்தில் இருந்த வாக்கி டாக்கியை திருடி எரித்த வழக்கில் ஜான்பால் ஏற்கனவே கைதானவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொள்ளையன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. பேரூராட்சி துணைத்தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம்:

    அச்சிறுப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது 45). அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்தார்.

    இன்று காலை சீனிவாசன் தொழுபேட்டில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்தனர்.

    கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் சீனிவாசனை சுற்றி வளைத்தனர். அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தப்பிச் செல்ல ஓட்டம் பிடித்தார். விரட்டிச் சென்ற கொலைக் கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதலை பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. அவரது செல்போன் மட்டும் கிடந்தது. எனவே கொலையாளிகள் சீனிவாசனின் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலையுண்ட சீனிவாசன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்து உள்ளார். கட்சியிலும் அவருக்கு செல்வாக்கு இருந்து உள்ளது. இதன் மூலம் அவரது உறவினர் பெண்ணுக்கும் கட்சியில் பொறுப்பு வாங்கி கொடுத்து உள்ளதாக தெரிகிறது.

    எனவே கட்சியில் சீனிவாசனின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டினரா? அல்லது ரியல் எஸ்டேட் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. அச்சிறுப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட சீனிவாசனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தி.மு.க. பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ நோக்குடன் மத்திய சுற்றுலாத்துறை துவக்கிய ‘சுவதேஷ் தர்‌ஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரலாற்று சுற்றுலா தளமாக கருதப்பட்டாலும் அங்கு கடற்கரை தூய்மை இல்லாமலும், மின் விளக்குகள் இல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இன்றி இருந்தது.

    இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்று வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசுக்கு இணையதளம் வழியாக புகார்களும் அனுப்பி இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ நோக்குடன் மத்திய சுற்றுலாத்துறை துவக்கிய ‘சுவதேஷ் தர்‌ஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கோவில் வடபகுதி மற்றும் தென்பகுதி கடலோரம் 3.2 கி.மீ. தூரத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன குப்பை தொட்டி, நம்ம டாய்லைட், 100 எல்.இ.டி மின் விளக்கு, கான்கிரீட் நடைபாதை, கண்காணிப்பு கேமரா, வரலாற்று விபரத்துடன் கூடிய வழிகாட்டி பலகை, முதலுதவி மையம், வைபை வசதி, கண்காணிப்பு கோபுரம் வைக்கப்படுகிறது.

    மேலும் பசுமை பூங்கா, கடற்கரையை தூய்மைபடுத்த நவீன வாகனம், கடலில் சிக்குவோரை மீட்க ரப்பர் படகு, சுற்றுலா பயணிகளின் வாகணம் நிறுத்த கூடுதல் இடம் போன்ற பல வசதிகளுடன் சென்னை மெரினா கடற்கரை போல் மாமல்லபுரம் கடற்கரையையும் மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

    முதல் கட்ட பணியாக மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குனர் சோஹெப் சாமந்த் உள்பட 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது தமிழக சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் வேணுகோபால், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், தலைவர் (பொறுப்பு) தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    பழவந்தாங்கலில் பெண்ணிடம் சொகுசு காரில் வந்து நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல் பாலாஜி நகர் 6-வது தெருவில் வசித்து வருபவர் தங்க ஜெயம். இவரது மகள் அதே பகுதி ஏ.ஜி.ஆர். காலனியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று மாலை தங்கஜெயம் தனது மகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். பாலாஜி நகர் அருகே வந்த போது பின்னால் வந்த மர்ம வாலிபர் திடீரென தங்கஜெயம் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தான்.

    பின்னர் அவன் அதே தெருவில் தயாராக நின்ற சொகுசு காரில் ஏறி தப்பி சென்று விட்டான்.

    இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கத்தில் கொள்ளையனை விரட்டி சென்ற ஆசிரியை நந்தினி மொபட்டில் இருந்து விழுந்து பலியானார். இதன் பின்னர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    தற்போது கொள்ளையர்கள் சொகுசு காரில் வந்து நகை பறித்து செல்லும் புதிய பாணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது, நகை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் மீது போலீசார் கடுமை நடவடிக்கை எடுக்க வேண் டும். மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டும் கொள்ளையர்கள் இப்போது சொகுசு காரிலும் வந்து நகை பறிப்பிலும் ஈடுபடுகிறார்கள் என்றனர்.

    ×