என் மலர்
காஞ்சிபுரம்
மதுராந்தகத்தை அடுத்த புத்திரன்கோட்டையில் வசித்து வந்தவர் திருவேங்கடம் (வயது 50) விவசாயி.
இன்று காலை அவர் விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டார். அதிகாலை மழை பெய்து இருந்ததால் அதில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது.
இதில் மின்சாரம் தாக்கி திருவேங்கடம் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சூனாம்பேடில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர், குப்பம் சாலையில் உள்ள ஏரியில் கடந்த மாதம் 26-ந் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாமல் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கொலையுண்ட வாலிபரின் புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது கொலையுண்டது காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர், சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்(எ) ராமச்சந்திரன் என்பது தெரிந்தது.
புகைப்படத்தை வைத்து அவரது மனைவி டில்லிராணி அடையாளம் காட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனை அவரது நண்பர்களே கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எழிலரசன், பி.ஏ படித்து வரும் காமேஷ் மற்றும் தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கூறும் போது " நண்பர் ஒருவரது மனைவியுடன் மணிகண்டன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை நாங்கள் கண்டித்தும் கேட்க வில்லை. எனவே அவனை கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் வீசினோம்'' என்றனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அறிவிப்பார்கள்?. என்னையோ அல்லது வேறு யாரையோ தலைவராக அறிவித்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சியை வளர்க்க இணைந்து செயல்படுவோம்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கக்கூடாது என்று கூறியதாக செய்திகள் வந்தன. இதில் எத்தகைய உண்மை உள்ளது? என்பது தெரியவில்லை. இளங்கோவன் தரப்பினர் இதற்கு மறுப்பு அறிக்கைக்கூட வெளியிடவில்லை.
இளங்கோவனை பலர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டபோதும் நான் அவருடன் இணைந்தே பணியாற்றினேன். தொடர்ந்து அவருடன் நல்லுறவில்தான் இருந்து சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததை அனைத்து தொண்டர்களும் அறிவர். அவருடைய நன்றி உணர்ச்சிகளுக்கு எனது நன்றி.
நான் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்தேன். பின்னர் பா.ஜனதா கட்சிக்கு சென்றேன். அதன்பிறகுதான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தேன். இது சோனியா, ராகுல் காந்தி இருவருக்கும் தெரியும். நான் எதையும் மறைக்கவில்லை. எந்த கட்சியில் இருந்தாலும் யாருக்கும் நான் துரோகம் செய்தது கிடையாது.
ப.சிதம்பரம் வார்டு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்கிறார்கள். அவர் 7 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த வியாழக்கிழமை கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வரும்போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை அச்சரப்பாக்கம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் பா.ஜனதா மாவட்ட ஆதிதிராவிட அணி தலைவர் திருமுகாட்டை சேர்ந்த பெருமாள் (45), அச்சரப்பாக்கம் பா.ஜனதா நகர தலைவர் பாலாஜி (50) மற்றும் பாரதீய ஜனதாவை சேர்ந்த படாளம் கார்த்திகேயன் (31), மணப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்ற குணா (21), நாகராஜ் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
பேரூராட்சி துணை தலைவர் கொலையில் தொடர்புடைய 7 பேரில் போலீசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மறைமலைநகரை சேர்ந்த முரளி, பல கொலை வழக்கில் தொடர்புடைய தாம்பரத்தை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கைதான பா.ஜ. நிர்வாகிகளான பெருமாள், பாலாஜி ஆகியோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் அவர் அச்சரப்பாக்கம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று வந்தார். அவர் இருந்தால் எங்களது கட்சியான பா.ஜனதா கட்சி அந்த பகுதியில் வளரமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அச்சரப்பாக்கம் மலை மீது உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த பாலாஜியை நீக்கி விட்டு வேறு ஒருவரை பூசாரியாக நியமித்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
எங்கள் கட்சியை வளர விடாமல் தடுத்து வந்த அவர் எங்களது தொழிலிலும் குறுக்கிட்டு வந்ததாலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவரே வெற்றி பெறும் நிலையில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதாலும் அவரை திட்டமிட்டு கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கைதான 5 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த சிட்லபாக்கம், லெனின் தெரு சாலையோரத்தில் கடந்த 11-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. அந்த குழந்தையின் உடலை சில நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தை, துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. நாய்கள் கடித்து குதறியதில் குழந்தையின் கால் துண்டாகி இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசிச்சென்றது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையை வீசி சென்றதாக சிட்லபாக்கம், திருமங்கை மன்னா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர் (வயது 26), அவரது மனைவி சாந்தி (25) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராம் பகதூருக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் தனக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவன், மனைவி இருவரும் குழந்தையை ரோட்டில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் கணபதி புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவலு. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டின் அருகே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.
நேற்று மாலை கேசவலு சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது வேகமாக வீசிய காற்றால் கற்பூரத்தில் இருந்த தீ அவரது வேட்டியில் பட்டு தீ பிடித்து எரிந்தது. உடனே அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது45).
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.
நேற்று முன்தினம் அவர் அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக அச்சரப்பாக்கத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளது. போலீசிலில் சிக்கி உள்ளவர்களில் 3 பேர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என்று தெரிகிறது. தொழில் போட்டியில் சீனிவாசன் கொலை செய்யப்பட்டு உள்ளது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் கொலை தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன என்றார்.
திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள போலீஸ்நிலைய வளாகத்தில் சிறப்பு உதவிஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸ்காரர் சுதாகர், தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து இருந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. போலீசார் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதை கண்டு உடனடியாக அணைக்க முற்பட்டார்கள். ஆனால் 2 மோட்டார்சைக்கிள்களும் முழுவதும் எரிந்து போயின. மர்மநபர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டனரா? அல்லது மோட்டார்சைக்கிளில் ஏற்பட்ட ஏதாவது கோளாறு காரணமாக தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் நாராயணன் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரியும் ரவுடியுமான ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரிக்க முடிவு செய்து இருந்தனர்.
இதற்கிடையே ஸ்ரீதர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஸ்ரீதர் மீது மாவட்ட போலீசுக்கு பல்வேறு புகார்களும் வந்தன.
இந்த நிலையில் நாராயணன் கொலை தொடர்பாக ஆகஸ்டு 1-ந்தேதிக்குள் காஞ்சீபுரம் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஸ்ரீதர் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளனர்.
இது குறித்த அறிவிப்பு திருப்பருத்திகுன்றம் பகுதியில் உள்ள ஸ்ரீதர் வீட்டில் கோர்ட்டு ஊழியர்களால் ஒட்டப்பட்டது.
சாராய வியாபாரியான ஸ்ரீதர் மீது காஞ்சீபுரம் காவல் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 முறையும், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 முறையும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






