என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு ஊழல் இல்லாததாக அமைய வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் எம்.எல். ஏக்களை கட்சி தலைவர் என்ற முறையில் அழைத்துள்ளேன். இந்த கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.

    சட்டமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுனர் கூறி இருப்பது சரியான நடவடிக்கை. புதிதாக பதவி ஏற்று உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முறையாகவும், ஊழலற்ற, லஞ்சம் இல்லாத, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நன்மை செய்கிற அரசாகவும் இருக்க வேண்டும்.

    புதுக்கோட்டையில் மீத்தேன் எரிவாயு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் இதை எதிர்க்கிறோம். தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் பண மதிப்பின் நீக்கத்தை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் காஞ்சீபுரம், காந்தி வீதி, பெரியார் தூண் அருகில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பண மதிப்பு நீக்க எதிர்ப்பு குழுவின் தலைவருமான பெ.விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி பி.வி.குப்பன், ஜி.வி.மதியழகன், ஏ.வி.நாகராஜ், எஸ்.எல்.என்.எஸ்.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் சிறப்புரை ஆற்றுகிறார். அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், ஊடகத்துறை தலைவர் ஏ.கோபண்ணா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் அய்யா, மாநில பொதுச்செயலாளர் எல்.சிரஞ்சீவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒரே நாளில் பட்டப்பகலில் 3 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த காயார் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய தம்பி கோதண்ட பாணி. இருவரும் அடுத்தடுத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றனர். அவர்களது மனைவிகளும் வெளியில் வேலைக்கு சென்று விட்டனர். சாவியை வீட்டு முன்பு மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மாலையில் பெருமாளும், கோதண்டபாணியும் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பெருமாள் வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை காணவில்லை. கோதண்டபாணி வீட்டில் இருந்த ஒரு பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    ஏரிக்கரை தெருவில் உள்ள மணி வீட்டிலும் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் பட்டப்பகலில் 3 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர் அருகே தீ விபத்தில் 30 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா, அல்லது நாசவேலை காரணமா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவான்மியூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி, பாண்டிச்சேரி பாட்டை சாலையில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வடமாநில கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள்.

    நேற்று இரவு ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்ததும் சிறுசேரி, துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் அங்கிருந்த 30 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது நாசவேலை காரணமா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2017 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-தேதி வரை பெறப்பட்டது.

    மொத்தம் 15 லட்சத்து 85 ஆயிரத்து 603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இவை கடந்த ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ள இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவற்றின் காரணமாக 3 லட்சத்து 84 ஆயிரத்து 369 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது மாவட்டங்களில் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்த தாரர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

    புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இ.சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தில் தங்களின் கைபேசி எண்மை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கடையை கவனிக்க செல்லாததால் ஆத்திரம் அடைந்த கணவர் தலையில் எடைக்கல்லை போட்டு மனைவியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்போரூர்

    கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூரில் வசித்து வருபவர் மிச்சல்ராஜ். வீட்டின் அருகே பழைய பொருட்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவருடைய மனைவி மரியரஞ்சிதம் என்ற ஜெயராணி (வயது24). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.

    நேற்று மாலை கடையை பார்த்துக்கொள்ளும்படி மனைவியிடம் மிச்சல்ராஜ் கூறினார். ஆனால் மரியரஞ்சிதம் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலை உள்ளதால் கடையை கவனிக்க முடியாது என்று தெரிவித்தார்.

    இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு இருவரும் வீட்டில் தூங்கினர். ஆத்திரத்தில் இருந்த மிச்சல்ராஜ் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவு 12 மணியளவில் கடையில் இருந்த 25 கிலோ எடைக்கல்லை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி மரியரஞ்சிதம் தலையில் போட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து மரியரஞ்சிதம் பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மரியரஞ்சிதம் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மரியரஞ்சிதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மிச்சல்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மனைவியை கொலை செய்ய வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீக்குளித்த வாலிபருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், பல்லவர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் மூசா (வயது 37) பெயிண்டர். அ.தி.மு.க. தொண்டராக உள்ளார்.

    நேற்று மாலை அவர் காஞ்சீபுரம் வணிகர் வீதிக்கு வந்தார். அப்போது முதல்-அமைச்சராக பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என்று கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து மூசாவை மீட்டனர். உடல் கருகிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பலத்த காயம் அடைந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    இச்சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் இன்று முதல் மார்ச் 7-ம் தேதிவரை விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு கட்ட ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய குழு ஆய்வு
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதற்கான இடத்தை மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.14 கோடியை ஒதுக்கி உள்ளது. இதற்காக மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழு நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசேகரன் கூறியபோது:–

    காஞ்சீபுரம் மாவட்டம் மட்டுமல்லாது விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருவது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தற்போது அதி நவீன மருத்துவ முறையை டாக்டர்கள் கையாண்டு வருகின்றனர்.
    உயிர் சேதம்

    கடந்த வருடம் முதல் பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன மருத்துவ கருவிகள் வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தலையில் ஏற்படும் காயம், சாலை விபத்தில் கை, கால்கள் முறிவு காரணமாக வரும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகளை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர்சேதம் ஏற்படுகின்றது.
    மத்திய குழு ஆய்வு

    இதை தவிர்க்க மத்திய அரசு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்கு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டவும் தற்போது ரூ.14 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைய உள்ள இடத்தை நேற்று மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்த அறிக்கையும் மருத்துவ குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    மேலும் அரசு மருத்துவமனையில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தற்போது மருத்துவமனை வளாகத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பன்னீர்செல்வத்துக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவு இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 98 பேர் தான் இருந்தனர். அப்போதைய கவர்னர் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்து ஜானகியை முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் பெரும்பான்மையை காண்பிக்க முடியாததால் ஜானகியின் ஆட்சி கலைந்தது.

    தற்போது இருக்கும் சூழ்நிலை அப்படி அல்ல. தமிழக எம்.எல்.ஏக்கள் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தாங்கள் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று கவர்னரை சந்தித்துள்ளனர்.

    இருவரும் சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சசிகலா, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளார். கவர்னர் சட்டப்படி செயல்படவேண்டும்.முதல்-அமைச்சரை சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

    சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கூறும் போது, எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வந்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். அப்போது அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா? அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் இருந்தார்களா? என்பது தெரியவரும்.

    முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் தான் போலீஸ் துறை உள்ளது. தேவைப்பட்டால் காவல் துறையை அனுப்பி எம்.எல்.ஏக்களை அழைத்து வர வேண்டியது தானே? அப்படி செய்தால் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்று அவர் சொல்லிருப்பது கருத்து தானே. அது அவரது செயல்பாடாக இல்லையே.

    தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சி இல்லை. தற்போது அவர்கள் வரவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் கவர்னரின் காலதாமதம் சரிதான் என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும் தமிழகத்தின் ஆட்சியிலும், அ.தி.மு.க கட்சியிலும் பா.ஜனதா தலையிடுகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். ஒரு புறம் சுப்பிரமணியசாமி ஒரு கருத்தை கூறுகிறார். அது பா.ஜனதா கருத்து இல்லை என்று தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் தெரிவிக்கின்றனர். பா.ஜனதா கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்துக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவு இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கூறும் போது எங்களிடம் ஆதரவு கேட்பவர்களுக்கு எங்களது கட்சி எம்.எல்.ஏக்களிடமும், தேசிய தலைவர்களிடமும் ஆலோசித்து நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
    காஞ்சீபுரம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் நடந்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர், தி.மு.க. வினர் இருவருமே வாக்காளர்களுக்கு ரூ.200, ரூ.300 கொடுத்து நாட்டை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். தற்போது கோர்ட்டில் இருக்கும் வழக்கு தீர்ப்புக்காக தமிழக கவர்னர் காத்து இருக்கலாம். அதிகார போட்டிக்காக அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இவர்களுக்கிடையே உச்சக்கட்ட சண்டை எழுந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உடனடியாக தேர்தல் வர வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் தலையீடு தமிழ்நாட்டில் இருப்பதாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 500 வழக்குகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிமன்றம்-2 ன் நீதிபதி கருணாநிதி துவக்கி வைத்தார்.

    உரிமையியல் வழக்குகள், குடும்பநல வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள் என 700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    நீதிபதிகள் மீனாகுமாரி, பாக்கியஜோதி, பிரபாகரன், ஜெயவேல் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் லோகநாதன், சுரேஷ், பாகீரதி ரங்கராஜன் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். வழக்கின் இருதரப்பு வழக்கறிஞர்கள், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

    515 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 76 ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. இந்த லோக் அதாலத் மூலம் 875 பேர் பயன் பெற்றனர்.

    வழக்கறிஞர்கள் ரவிக்குமார், அப்துல் ஹக்கீம், ஆசைதம்பி, சத்தியமூர்த்தி, பார்த்தசாரதி, தாங்கி பழனி, வடிவேல், துரைமுருகன், சுந்தர் உள்ளிட்டோர் லோக் அதாலத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    ×