என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் 2 பிரிவாக பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் சமையல்காரர் வெள்ளியங்கிரி உள்பட 7 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுனில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 70 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று இரவு அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அப்போது சிறுவர்கள் 2 பிரிவாக பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கற்களையும் வீசினார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சமையல்காரர் வெள்ளியங்கிரி சிறுவர்களை தடுக்க முயன்றார்.

    ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் அவரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு வந்த காவலர்கள் மோதலில் ஈடுபட்ட சிறுவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை தனித்தனி அறைகளில் அடைத்தனர்.

    இந்த மோதலில் சமையல்காரர் வெள்ளியங்கிரி உள்பட 7 சிறுவர்கள் காயம் அடைந்தனர். வெள்ளியங்கிரிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சிறுவர்களின் கோஷ்டி மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இங்கு சிறுவர்களிடையே மோதல் ஏற்படுவதும், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    துரைப்பாக்கத்தில் போலீசார் விரட்டியபோது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலியானர். இது குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வந்தவர் மோவின் (வயது 35).

    இவர் அதே பகுதியில் வசிக்கும் மோகனாவை தாக்கினார். இது குறித்து கண்ணகிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுபற்றி விசாரிப்பதற்காக மோவின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் பயந்து போன மோவின் 4-வது மாடியில் இருந்து தாவி குதித்தார்.

    இதில் நிலை தடுமாறிய அவர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மோவின் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்,

    இது குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன் என சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டு விவசாயிகள், கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை நான் சந்தித்து பேசினேன்.

    இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பின்னர் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்றேன். அதற்கு அவர் வறட்சி நிவாரண குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி வழங்க முடியும்.

    நான் விவசாய துறை அமைச்சரையும் உள்துறை அமைச்சரையும் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பேன் என்று கூறினார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடத்தலாம் என்று நினைத்தால் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழக விவசாயிகள் ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கல்பாக்கம் அருகே காவலாளி கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் வீட்டுமனை விற்பனை அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சுரேஷ் .வயது 48).

    நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை கொலையாளிகள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கொலை நடந்த வீட்டுமனை பிரிவு அலுவலகத்துக்குள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்ததை அருகில் உள்ள மற்றொரு மனைப்பிரிவு காவலாளி பார்த்து உள்ளார்.

    இதனை வைத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளிடம் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் திருப்போரூர், பையனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இது தொடர்பாக பெண் உள்பட மேலும் 3 பேரிடமும் விசாரணை நடக்கிறது.

    கொள்ளை முயற்சியை தடுத்ததால் அவர்கள் சுரேசை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

    கல்பாக்கம் அருகே உள்ள வயலூரில் சில மாதங்களுக்கு முன் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

    இதுவரை இந்த வழக்கில் கொலையாளி பிடிபடவில்லை. தொடர்ந்து அணு மின் நிலையம் அருகேயே கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்வதால் கல்பாக்கம், அணுபுரம் பகுதியில் தங்கியிறுக்கும் அணுமின் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிணஅறை சாவி மாயமானதால் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக உடல்கள் பிண அறை வாசலிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்படும் உடல்கள் அங்குள்ள பிண அறையில் வைக்கப்படுவது வழக்கம்.

    விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரேத பரிசோதனை நடைபெறாது. எனவே கொண்டு வரப்படும் உடல்கள் பிண அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த அறை பூட்டப்பட்டு அதன் சாவி அவசர சிகிச்சை பிரிவில் வழக்கமான இடத்தில் ஊழியர்கள் வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி அளவில் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த சிறுசேரியில் கிணற்றில் மூழ்கி பலியான வாலிபர் உடல், கூடுவாஞ்சேரியில் தற்கொலை செய்த பெண்ணின் உடல் மற்றும் செங்கல்பட்டை அடுத்த கரும்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி பலியான மற்றொரு வாலிபர் உடல் என 3 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.இதையடுத்து பிணவறையின் கதவை திறக்க அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சாவியை எடுப்பதற்கு ஊழியர்கள் சென்றனர். ஆனால் வழக்கமாக வைக்கப்படும் இடத்தில் சாவி இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாயமான சாவியை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட 3 உடல்களும் பிண அறை வாசலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுமார் 7 மணி நேரம் நேரத்துக்கும் மேலாக உடல்கள் அங்கேயே இருந்தன. இரவு 10 மணி அளவில் மாயமான சாவி சிக்கியது. இதைத் தொடர்ந்து உடல்களை பிண அறையில் ஊழியர்கள் வைத்தனர்.

    இச்சம்பவத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது. பிண அறையின் சாவியை கடைசியாக வைத்த ஊழியர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை வெளிநாட்டு கிளி மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 10-ந் தேதி ஊழியர்கள் கூண்டில் இருக்கும் பறவைகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாக கூண்டில் வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டை சேர்ந்த ‘மொலுகான்’ கொண்டைக் கிளி ஒன்று மாயமானது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். உடனே விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் கடந்த 16 நாட்களாக பூங்காவில் தொடர்ந்து தேடிப்பார்த்தனர். ஆனால் கிளி கிடைக்கவில்லை,

    இதனையடுத்து ஓட்டேரி போலீசில் வண்டலூர் உயிரியல் பூங்கா வனச்சரக அலுவலர் பிரசாத், வெளிநாட்டைச் சேர்ந்த அரியவகை கிளியை காணவில்லை என்று நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளியை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் கூண்டை உடைத்து மர்ம நபர்கள் கிளியை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாக்கத்தில் சிக்கிய ரூ.3 கோடி செல்லாத நோட்டுகள் மற்றும் கைதான 2 பேர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக டாக்டரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மணப்பாக்கம் சேதுலட்சுமி அவென்யூவில் நந்தம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காருடன் நின்ற 3 பேரில் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

    விசாரணையில் அவர்கள், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 43), தி.நகரை சேர்ந்த கிருஷ்ணமோகன் (53) என்பதும், அந்த காரில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி இருப்பதும் தெரிந்தது.

    பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கு சொந்தமான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை, தப்பி ஓடிய தரகர் பிரசாத் (35) மூலம் கமிஷன் அடிப்படையில் மணப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து மாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் தப்பி ஓடிய தரகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படும் தனியார் மருத்துவமனை டாக்டர், தற்போது டெல்லியில் நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டதாக தெரிகிறது.

    டெல்லியில் இருந்து டாக்டர் சென்னை வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் மணப்பாக்கத்தில் கமிஷன் அடிப்படையில் செல் லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் நபர் யார்?, இவர் களுக்கு வங்கி அதிகாரிகள் யாராவது உதவி செய்கிறார் களா? எனவும் போலீசார் தீவிர மாக விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் கைதான 2 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதலான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளையும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நந்தம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பான புகார்களுக்கு டாக்டரிடம் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. 
    சோழிங்கநல்லூரில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் சத்தோஜி (20), சவுரவ் சர்க்கா (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

    செம்மஞ்சேரியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அதிவேகமாக சென்றதால் ரோட்டின் குறுக்கே இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதே வேகத்தில் ரோட்டின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில், அருண்குமார் சத்தோஜியும், சவுரவ் சர்க்காவும் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியாகினர். தகவல் அறிந்ததும் கிண்டி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    மணப்பாக்கத்தில் நேற்று ரூ.3 கோடி பழைய 500, 1000 நோட்டு மாற்ற முயற்சி செய்த வழக்கில், பணத்தின் உரிமையாளரை பிடிக்க டாக்டரை பிடிக்க போலீஸ் டெல்லி விரைந்தது

    ஆலந்தூர்:

    மணப்பாக்கத்தில் நேற்று போலீசார் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.3 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. காரில் இருந்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் சிக்கினர்.

    அவர்கள் பெசன்ட் நகரை சேர்ந்த கண்ணன், தி.நகரை சேர்ந்த கிருஷ்ண மோகன் என்பதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி பணம் பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டருக்கு சொந்தமானது ஆகும். ஐதராபாத்தை சேர்ந்த புரோக்கர் பிரசாத் என்பவர் சொன்ன தகவலின் அடிப்படையில் சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் கமி‌ஷன் கொடுத்து பணத்தை மாற்ற சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தற்போது அந்த டாக்டர் டெல்லியில் உள்ளார். பணம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.

    கண்ணன், கிருஷ்ண மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடியவர் புரோக்கர் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    ஊரப்பாக்கம் ரேவதி புரத்தில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய குற்றவாளிகள் என்று தெரிய வருகிறது.

    முன்விரோதத்தில் எதிரிகளை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தனரா என்று விசாரணை நடந்து வருகிறது.

    கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 50). இவர் கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணிக்கு சென்றார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ரியல் எஸ்டேட் அலுவலக பூட்டை உடைக்க முயன்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அவர்களை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் மர்ம கும்பல் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டது.

    இன்று காலை அவ்வழியே சென்று பொது மக்கள் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.வி., கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களுக்காக கொலை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

    காவலாளி சுரேசுடன் ஏற்பட்ட மோதலில் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்ப ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் கொள்ளை நாடகம் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதேபோல் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை திருட வந்த போது தடுத்ததால் சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானமாக 18 லட்சத்து 91 ஆயிரத்து 782 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 144.5 கிராம் தங்கமும், 3360 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. வேலூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்(நகை சரிபார்ப்பு) தனபாலன், மேற்பார்வையில் கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டன.

    இதில் 18 லட்சத்து 91 ஆயிரத்து 782 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 144.5 கிராம் தங்கமும், 3360 கிராம் வெள்ளியும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 14 எண்ணிக்கையும் காணிக்கையாக கிடைத்தன. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. கடந்த ஒரு மாத திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் இதுவாகும். உண்டியல் வருவாய் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், தனியார் அமைப்பு தன்னார்வலர்கள் காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர்.

    ×